ஈஸ்ட்ரோஜன் ஒரு ஹார்மோன் ஆகும், இது பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. இது அனைத்து வயது ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ளது. இருப்பினும், பெண்களின் இனப்பெருக்க வயதில் அதிக அளவுகளில் காணப்படுகிறது. ஈஸ்ட்ரோஜன், பெண் உடலில் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துகிறது, பாலின பண்புகள், இனப்பெருக்கம் மற்றும் மார்பகங்களின் வளர்ச்சி உள்ளிட்ட பல செயல்பாடுகளுக்குக் காரணமாக இருக்கிறது.
மாதவிடாய் நிறுத்த காலத்தில் பெண்களில் ஈஸ்ட்ரோஜன் அளவு இயற்கையாகவே குறைகிறது, இது உடல் வெப்பம், இரவில் வியர்வை போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும் மற்றும் உங்கள் மனநிலை, பாலியல் ஆசை மற்றும் எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கும். ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உணவு சார்ந்த ஈஸ்ட்ரோஜன் என்று அழைக்கப்படுகின்றன, அவை இயற்கையாகவே தாவரங்களில் உள்ளன, அவை ஈஸ்ட்ரோஜனைப் போலவே செயல்படுகின்றன.
ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பற்றிய நுண்ணறிவைப் பெறவும், ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்க உதவும் உணவு ஆதாரங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும் இதனைப் படிக்கவும்.
ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் எவ்வாறு வேலை செய்கின்றன?
ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜனின் வேதியியல் அமைப்பைப் போன்றது மற்றும் அதன் ஹார்மோன் செயல்பாடுகளைப் பிரதிபலிக்கிறது. இது உயிரணுக்களில் ஈஸ்ட்ரோஜன் ஏற்பிகளுடன் இணைக்கப்படுவதன் மூலம் செயல்படுகிறது, இது ஈஸ்ட்ரோஜனின் செயல்பாட்டை பாதிக்கலாம். இருப்பினும், அனைத்து உணவு ஈஸ்ட்ரோஜனும் ஒரே மாதிரியாக செயல்படுவதில்லை. சில ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள், ஈஸ்ட்ரோஜெனிக் மற்றும் ஆன்டிஸ்ட்ரோஜெனிக் விளைவுகளை வெளிப்படுத்துகின்றன, அதாவது அவை ஈஸ்ட்ரோஜன் போன்ற விளைவுகளைக் கொண்டிருந்து, உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவை உயர்த்துகின்றன, மற்றவை அதன் செயல்களைத் தடுத்து, ஈஸ்ட்ரோஜன் அளவைக் குறைக்கின்றன. இருப்பினும், பல ஆய்வுகள் ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன்களின் நேர்மறையான ஆரோக்கிய விளைவுகள் குறித்து தெரிவிக்கின்றன. அவை கொழுப்பு அளவைக் குறைத்தல், மாதவிடாய் நிறுத்த அறிகுறிகளை எளிதாக்குதல், ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைத்தல் மற்றும் சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தைத் தடுத்தல் ஆகியவை ஆகும்.
ஈஸ்ட்ரோஜன் அளவை இயற்கையாக அதிகரிக்கக்கூடிய 5 முக்கிய உணவு ஆதாரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
ஈஸ்ட்ரோஜனை அதிகரிக்கும் 5 சிறந்த உணவுகள்
ஆளிவிதைகள்
ஆளி விதைகள் அவற்றின் ஈர்க்கக்கூடிய ஊட்டச்சத்து சுயவிவரம் மற்றும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகள் காரணமாக ஒரு சூப்பர்ஃபுட் என மதிப்பிடப்படுகிறது. லிக்னான்கள் அதிகளவில் நிறைந்திருப்பதால், மாதவிடாய் நின்ற பெண்களுக்கு மார்பக புற்றுநோய்க்கான அபாயத்தைக் குறைப்பதில் ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன்களாகச் செயல்படும் இரசாயன சேர்மங்களின் தொகுப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், ஆளி விதைகளில் மற்ற தாவர உணவுகளைவிட 800 மடங்கு அதிக லிக்னான்கள் உள்ளன, மேலும் இந்த அதிசய விதைகளை தொடர்ந்து சேர்ப்பதால் ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிக்கும்.
உலர் பழங்கள்
ஊட்டச்சத்து நிறைந்த உலர் பழங்களை ஒரு பிடி சாப்பிடுவது உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இது ஆரோக்கியத்தை அளிப்பதோடு, உங்கள் பசியையும் இனிப்பு சாப்பிட வேண்டும் என்கிற ஆசையையும் தடுக்கிறது. அவை பல ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன்களின் சக்திவாய்ந்த மூலமாகும், அவை ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதிலும் பெண்களின் பாலியல் ஆரோக்கியத்தை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பேரீச்சம்பழம், உலர் திராட்சை மற்றும் உலர் ஆப்ரிகாட் ஆகியவை ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் நிறைந்த சில உலர் பழங்களாகும்.
பூண்டு
பூண்டின் சக்திவாய்ந்த சுவையானது எந்த உணவிற்கும் சுவையூட்டுவதோடு, சில பொதுவான உடல்நல பிரச்சனைகளைக் குணப்படுத்துகிறது. பூண்டு மற்றும் பூண்டு எண்ணெய் சப்ளிமெண்ட்கள் இரண்டிலும் ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் நிறைந்துள்ளன. அவை ஈஸ்ட்ரோஜன் குறைபாடு காரணமாக ஏற்படக்கூடிய எலும்பு இழப்பைக் குறைக்க உதவுகிறது.
எள்
இந்தச் சிறிய விதைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இவை வழக்கமாக கூடுதல் மொறுமொறுப்பை அளிக்க மற்றும் சுவையைச் சேர்க்க உணவுகளில் சேர்க்கப்படுகின்றன. எள்ளில் முக்கிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதோடு, அதிக அளவு ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன்களும் உள்ளன. எள் பொடியைத் தொடர்ந்து உட்கொள்வது மாதவிடாய் நின்ற பெண்களில் ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்கிறது மற்றும் லிப்பிட் ப்ரொஃபைலை பராமரிக்கவும் உதவுகிறது என்பதற்குச் சான்றுகள் உள்ளன.
சோயாபீன்ஸ்
சோயாபீன்ஸ் புரதம் நிரம்பிய பருப்பு வகை ஆகும், அவை டோஃபு, டெம்பே மற்றும் எடமாமே. (முதிர்ச்சியடையாத சோயாபீன்ஸ்) போன்ற பல தாவர அடிப்படையிலான தயாரிப்புகளாக செயலாக்கப்படுகின்றன. சோயாபீன்ஸில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. இவற்றில் ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் ஐசோஃப்ளேவோன்கள் நிறைந்துள்ளது. இது பெண்களின் இனப்பெருக்க அமைப்பைப் பராமரிக்கும் ஈஸ்ட்ரோஜன் போன்ற விளைவுகளை உடலில் வெளிப்படுத்துவதோடு, மாதவிடாய் நிறுத்த அறிகுறிகளைப் போக்கவும் உதவுகின்றன.
முடிவு:
தாவர உணவுகளில் ஃபைட்டோ ஈஸ்ட்ரோஜன்கள் உள்ளன, இந்தச் சத்தான உணவுகளில் சிலவற்றை உங்கள் வழக்கமான உணவில் சேர்ப்பது உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்கவும், மாதவிடாய் நிறுத்தத்துடன் தொடர்புடைய அறிகுறிகளைக் குறைக்கவும் பெரிதும் பயனளிக்கும்.
பொறுப்புத் துறப்பு:
உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.