பழைய விதைகளிலிருந்து ஆரோக்கியமான காபியை நீங்கள் தயாரிக்கலாம். என்ன? ஆச்சரியமாக இருக்கிறதா? இது முற்றிலும் உண்மை. பேரீச்சம்பழ விதை காபி என்பது வழக்கமான காபிக்கு மாற்றான ஒரு காஃபின் இல்லாத பானமாகும், இது பேரீச்சம்பழ விதைகளை வறுத்து அரைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது. இயற்கையான இனிப்பு சுவை மற்றும் அவை வழங்கும் ஊட்டச்சத்துக்களின் செழிப்புக்காக பேரீச்சம்பழம் பரவலாக விரும்பப்பட்டாலும், விதைகள் பொதுவாக கழிவுகளாக நிராகரிக்கப்படுகின்றன. பேரீச்சம்பழ விதைகள் சமீபத்தில் காபிக்கு ஆரோக்கியமான மாற்றாக கவனத்தை ஈர்த்துள்ளன. இலேசான கசப்புத்தன்மையைக் கொண்ட இந்த விதை பார்ப்பதற்கு காபியைப் போலவே தெரிகிறது, ஆனால் காஃபினின் சலசலப்பு இல்லாமல் ஒரு தனித்துவமான சுவையை வழங்குகிறது.
இந்தப் பானம் மிகவும் பிரபலமானது, குறிப்பாக பேரீச்சம்பழம் ஒரு முக்கிய உணவாக இருக்கும் மத்திய கிழக்கு நாடுகளில் இது மிகவும் பிரபலம். இப்போது உலகம் முழுவதும் உள்ள ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவர்கள் மற்றும் இயற்கையான, காஃபின் இல்லாத, ஆரோக்கியமான பானங்களைத் தேடுபவர்கள் ஆகியோரால் இது பரவலாக விரும்பப்படுகிறது. இந்தப் பானத்தை உட்கொள்வதன் ஆரோக்கிய நன்மைகள், இதைத் தயாரிக்கும் முறை மற்றும் பக்கவிளைவுகள் ஆகியவற்றை இந்த வலைப்பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.
ஊட்டச்சத்து விவரக்குறிப்பு
பழ விதைகளில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் உயிரியல்ரீதியாகச் செயல்படும் சேர்மங்கள் நிறைந்துள்ளன. இருப்பினும், ஊட்டச்சத்து உள்ளடக்கம் வகை, பதப்படுத்துதல் மற்றும் வறுத்தலைப் பொறுத்து மாறுபடும்.
100 கிராம் உலர்ந்த பேரீச்சம்பழ விதைகளில் உள்ள ஊட்டச்சத்து உள்ளடக்கம்:
- உணவு நார்ச்சத்து: 22–35%
- புரதம்: 5–7%
- கொழுப்பு: 6–12% (பெரும்பாலும் ஆரோக்கியமான நிறைவுறா கொழுப்புகள்)
- கார்போஹைட்ரேட்டுகள்: 60–70%
- ஃபீனாலிக் சேர்மங்கள்: ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்தது
- அதிக அளவு பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம், இரும்பு மற்றும் துத்தநாகம்
- சிறிதளவு பி வைட்டமின்கள்
விதைகளில் பாலிபினால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன, அவை அவற்றின் ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகளுக்குப் பங்களிக்கின்றன. இந்தப் பண்புகள் ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை எதிர்த்துப் போராடுவதிலும், நாள்பட்ட நோய்கள் உருவாகும் அபாயத்தைக் குறைப்பதிலும் நன்மை பயக்கும்.
ஆரோக்கிய நன்மைகள்
காஃபின் இல்லாமல் ஆற்றல் ஊக்கம்
பேரீச்சம்பழ விதை காபி காஃபினின் பக்கவிளைவுகள் இல்லாமல் இயற்கையான ஆற்றல் ஊக்கத்தை வழங்குகிறது. எனவே, காஃபின் உடலுக்கு ஒத்துக்கொள்ளாதவர்களுக்கு இது ஒரு சிறந்த பானமாக உள்ளது.
ஆன்டிஆக்ஸிடென்ட்கள் நிறைந்தது
இதில் இருக்கும் பாலிஃபினால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது, அணு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் நீரிழிவு, இதய நோய் மற்றும் உடல் பருமன் போன்ற நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது.
செரிமான ஆரோக்கியம்
அதிக நார்ச்சத்து இருப்பதால், பேரீச்சம்பழ விதை காபி சீரான செரிமான செயல்முறையை ஊக்குவிக்கும். மேலும், குடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்துவதன் மூலமும் மலச்சிக்கலைத் தடுப்பதன் மூலமும் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும்.
நீரிழிவு நோயை நிர்வகிக்கிறது
பேரீச்சம்பழ விதை காபியைச் சர்க்கரை இல்லாமல் உட்கொள்வது வழக்கமான காபிக்கு ஆரோக்கியமான மாற்றாகும். மேலும் கிளைசெமிக் குறியீடு குறைவாகவும், உணவு நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், இது இரத்த சர்க்கரை அதிகரிப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இருப்பினும், கூடுதல் ஆராய்ச்சி தேவை.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
பேரீச்சம்பழ விதைகளில் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் இருப்பது இருதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது மற்றும் ஆரோக்கியமான இரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவுகிறது.
அழற்சி எதிர்ப்பு விளைவுகள்
பேரீச்சம்பழ விதைகளின் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் அழற்சியைக் குறைக்க உதவுகிறது. மேலும் கீல்வாதம் மற்றும் பிற கோளாறுகள் போன்ற அழற்சி நிலைகளை சரிசெய்கின்றன என்பதை பல சான்றுகள் வெளிப்படுத்துகின்றன.
வீட்டிலேயே பேரீச்சம்பழ விதை காபியை எப்படி தயாரிப்பது?
பேரீச்சம்பழ விதை காபி தயாரிப்பது ஒரு எளிய செயல்முறை:
தேவையான பொருட்கள்:
- பேரீச்சம்பழ விதைகள் (கழுவி உலர்த்தப்பட்டது)
- தண்ணீர்
செய்முறை:
- பேரீச்சம்பழத்தை உட்கொண்ட பிறகு, விதைகளை சுத்தம் செய்யவும்.
- அனைத்து ஒட்டும் பகுதிகளையும் அகற்ற அவற்றை நன்கு கழுவவும்.
- ஈரப்பதத்தை நீக்க விதைகளை முழுவதுமாக வெயிலில் உலர்த்தவும்.
- உலர்ந்த விதைகளை ஒரு பாத்திரத்தில் அல்லது ஓவனில் 180–200°C (350–390°F) வெப்பநிலையில் 20–30 நிமிடங்கள், அவை கருமையாகி நறுமணம் வரும் வரை வறுக்கவும். அதை குளிர்விக்க விடவும்.
- காபி கிரைண்டர் அல்லது வலுவான பிளெண்டரைப் பயன்படுத்தி, வறுத்த விதைகளை உங்கள் விருப்பத்தைப் பொறுத்து கொரகொரவென அல்லது மெல்லிய தூளாக அரைக்கவும்.
- ஒரு கப் கொதிக்கும் நீரில் 2 தேக்கரண்டி அரைத்த பேரீச்சம்பழ விதையைச் சேர்க்கவும்.
- 5–10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.
- வடிகட்டி சூடாக பரிமாறவும். சுவைக்காக தேன், இலவங்கப்பட்டை அல்லது தாவரங்கள் மூலம் கிடைக்கும் பாலைச் சேர்க்கலாம்.
பேரீச்சம்பழ விதை காபி பொதுவாக பாதுகாப்பானது மற்றும் பெரும்பாலான ஆரோக்கியமான பெரியவர்களுக்கு ஏற்றது. இருப்பினும், சில விஷயங்களைப் பரிசீலனை செய்ய வேண்டும்:
அரிதாக இருந்தாலும், சிலருக்கு பேரீச்சம்பழம் அல்லது அதன் விதைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். எப்போதும் சிறிய அளவில் தொடங்குங்கள்.
அதிக நார்ச்சத்து சிலருக்கு வயிறு உப்புசம் அல்லது வாயுவை ஏற்படுத்தக்கூடும், குறிப்பாக அதிக அளவில் உட்கொண்டால் இந்நிலை ஏற்படலாம்.
கர்ப்பம் அல்லது பாலூட்டலின் போது பேரீச்சம்பழ விதை காபியின் விளைவுகள் குறித்து வரையறுக்கப்பட்ட ஆராய்ச்சி மட்டுமே உள்ளது, எனவே மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.
உங்களுக்கு நாள்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால் அல்லது மருந்து எடுத்துக் கொண்டிருந்தால், எந்தவொரு மூலிகை அல்லது பானங்களையும் உட்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரைத் தொடர்பு கொள்ளவும்.
முடிவுரை
பேரீச்சம்பழ விதை காபி வழக்கமான காபிக்கு ஒரு நிலையான, ஆரோக்கியமான மற்றும் காஃபின் இல்லாத மாற்றாகும். அதன் வளமான ஆன்டிஆக்ஸிடன்ட், செரிமான நன்மைகள் மற்றும் சுவை, இயற்கையாகவே தங்கள் பான விருப்பங்களை பன்முகப்படுத்த விரும்புவோருக்கு ஒரு சிறந்த தேர்வாகும். வீட்டிலேயே தயாரிக்க எளிதான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பேரீச்சம்பழ விதை ஆரோக்கியத்தை அளிக்கிறது.
பொறுப்புத் துறப்பு:
உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.