பனீர் என்பது இந்திய சமையலறைகளில் பிரபலமான உணவாகும், அதன் அற்புதமான சுவைக்காகவும், ஏராளமான ஊட்டச்சத்துகள் இருப்பதாலும் பலரால் விரும்பப்படுகிறது. இருப்பினும், சமீப காலங்களில், "அனலாக் பனீர்" என்று அழைக்கப்படும் ஒரு தயாரிப்பு, மலிவான மாற்றாக உணவுத் துறையில் நுழைந்து வருகிறது. இது வழக்கமான பனீர் போலவே தோற்றமளிக்கலாம் என்றாலும், அனலாக் பனீர் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய விளைவுகளின் அடிப்படையில் மிகப்பெரிய வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. இது நுகர்வோர் மத்தியில் அதன் தரம் மற்றும் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புகிறது.
அனலாக் பனீர் என்றால் என்ன?
அனலாக் அல்லது செயற்கை பனீர் என்பது செயற்கை பொருட்கள் மற்றும் இரசாயன சேர்க்கைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பால் அல்லாத வழக்கமான பனீர் வகையாகும். இது பின்வரும் பொருட்களின் கலவையிலிருந்து தயாரிக்கப்படுகிறது:
- தாவர எண்ணெய்கள்
- ஸ்டார்ச் அல்லது மாவு
- எமல்சிஃபயர்கள் மற்றும் ஸ்டெபிலைசர்கள்
- பால் திடப்பொருட்கள் அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பால் பவுடர்
- பதப்படுத்திகள் மற்றும் செயற்கை சுவையூட்டிகள்
எலுமிச்சை சாறு அல்லது வினிகர் போன்றவற்றுடன் பாலைத் திரியச் செய்வதன் மூலம் வழக்கமான பனீர் தயாரிக்கப்படுகிறது. மாறாக, அனலாக் பனீர் அதிக அளவில் பதப்படுத்தப்படுகிறது மற்றும் உண்மையான பனீர் அமைப்பையும் தோற்றத்தையும் பிரதிபலிக்கும் கூறுகள் மற்றும் சேர்க்கைகளைக் கொண்டிருக்கிறது.
ஊட்டச்சத்து வேறுபாடுகள்
வழக்கமான பனீர்
புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி மற்றும் பி12 ஆகியவற்றின் நன்மைகள் நிரம்பிய பாலில் இருந்து வழக்கமான பனீர் தயாரிக்கப்படுகிறது. இது இயற்கையான சுவை, குறைந்தபட்ச பதப்படுத்துதல் மற்றும் ஆரோக்கியமான ஊட்டச்சத்து ஆகியவற்றின் காரணத்தால் மதிக்கப்படுகிறது.
தோராயமான ஊட்டச்சத்து மதிப்பு (100 கிராமுக்கு):
கலோரிகள்: 265-300 கிலோகலோரி
புரதம்: 18-20 கிராம்
கொழுப்பு: 20-25 கிராம்
கால்சியம்: 200-300 மிகி
அனலாக் பனீர்
அனலாக் பனீரில் புரதம் குறைவாகவும், தாவர எண்ணெய்கள் மற்றும் ஸ்டார்ச் சேர்க்கப்படுவதால் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாகவும் இருக்கும் ஒரு மலிவான வகையாகும். இதில் வழக்கமான பனீரில் காணப்படும் கால்சியம் மற்றும் வைட்டமின்கள் போன்ற முக்கிய ஊட்டச்சத்துகள் இருக்காது.
தோராயமான ஊட்டச்சத்து மதிப்புகள் (100 கிராமுக்கு):
கலோரிகள்: 250-280 கிலோகலோரி
புரதம்: 5-10 கிராம்
கொழுப்பு: 15-20 கிராம் (பெரும்பாலும் டிரான்ஸ் கொழுப்புகளைக் கொண்டிருக்கும்)
கால்சியம்: மிகக் குறைவு
அனலாக் பனீர் சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் என்ன?
அனலாக் பனீரையும் வழக்கமான பனீரையும் பார்த்தால் எந்த வித்தியாசமும் இருக்காது. மேலும் இது ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்:
குறைந்தபட்ச ஊட்டச்சத்து மதிப்பு
அனலாக் பனீரில் புரதம் மற்றும் கால்சியம் குறைவான அளவிலேயே உள்ளது, அதே நேரத்தில் வழக்கமான பனீரை சாப்பிடுவதால் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் மேம்படும்.
அதிக டிரான்ஸ் கொழுப்பு உள்ளடக்கம்
பெரும்பாலான அனலாக் வகைகள் ஹைட்ரஜனேற்றப்பட்ட தாவர எண்ணெய்களைப் பயன்படுத்துகின்றன, அவற்றில் டிரான்ஸ் கொழுப்பு அதிகமாக உள்ளது. இந்த வகை பனீரை தொடர்ந்து உட்கொள்வது அதிக கொழுப்பு அளவு, இதய நோய் மற்றும் உடல் பருமன் ஆகிய அபாயங்கள் ஏற்பட வழிவகுக்கும்.
செரிமான பிரச்சினைகள்
அனலாக் பனீரில் ஸ்டார்ச் மற்றும் செயற்கை சேர்க்கைகள் இருப்பதால் வயிறு உப்புசம், வாயு அல்லது அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும், குறிப்பாக இரைப்பை குடல் பிரச்சினை உள்ளவர்களுக்கு இது ஏற்படும்.
ஒவ்வாமை எதிர்வினைகள்
அனலாக் பனீரில் சேர்க்கப்படும் செயற்கை சுவையூட்டிகள் அல்லது பதப்படுத்திகளால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம்.
சாத்தியமான நீண்டகால அபாயங்கள்
அனலாக் பனீரை தொடர்ந்து உட்கொள்வது நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற வாழ்க்கை முறை கோளாறுகள் உருவாக்கும் அபாயத்திற்குப் பங்களிக்கக்கூடும்.
அனலாக் பனீரை எவ்வாறு அடையாளம் காண்பது?
வழக்கமான பனீரிலிருந்து அனலாக் பனீரை வேறுபடுத்தி பார்ப்பது என்பது சற்று சிக்கலானதாக இருக்கலாம், ஏனெனில் இது வழக்கமான பனீரைப் போலவே இருக்கும் வகையில் தயாரிக்கப்படுகிறது. இருப்பினும், இரண்டையும் வேறுபடுத்துவதற்கான சில குறிப்புகளை இங்கே கொடுத்துள்ளோம்:
அமைப்பு
வழக்கமான பனீர் மென்மையான மற்றும் மிருதுவான அமைப்பைக் கொண்டுள்ளது. எண்ணெய் மற்றும் ஸ்டார்ச் இருப்பதால் அனலாக் பனீர் ரப்பர் போன்றோ அல்லது வழுவழுப்பாகவோ இருக்கும்.
சுவை
உண்மையான பனீரில் பால் சுவை இருக்கும், அதே நேரத்தில் அனலாக் பனீர் சுவை இல்லாமல் இருக்கும் அல்லது சற்று செயற்கை சுவையைக் கொண்டிருக்கலாம்.
விலை வேறுபாடு
அனலாக் பனீர் பெரும்பாலும் வழக்கமான பனீரைவிட கணிசமாக மலிவானது.
பேக்கேஜிங் மற்றும் லேபிள்கள்
பேக்கேஜிங்கில் உள்ள உட்பொருட்களின் பட்டியலைப் பாருங்கள். நீங்கள் தாவர எண்ணெய்கள், ஸ்டார்ச் அல்லது எமல்சிஃபயர்கள் என்று குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்த்தால், அது அனலாக் பனீராக இருக்கலாம். மேலும், பனீருக்கு மாற்றையோ அல்லது பதப்படுத்தப்பட்ட பனீரையோ வாங்காதீர்கள், அந்தப் பனீர் அனலாக் பனீராக இருக்கலாம்.
ட்ராப் சோதனை
சூடான நீரில் ஒரு பனீர் போடுங்கள். வழக்கமான பனீர் அதன் வடிவத்தையும் நிலைத்தன்மையையும் தக்க வைத்துக் கொள்ளும், அதேசமயம் அனலாக் பனீர் எண்ணெயை வெளியிடலாம் அல்லது அதிக மென்மையாக மாறக்கூடும்.
வெப்ப சோதனை
சமைக்கும்போது அனலாக் பனீர் உருகி அதிகப்படியான எண்ணெயை வெளியிடலாம், அதேசமயம் வழக்கமான பனீர் அப்படிச் செய்யாது.
அயோடின் சோதனை
ஒரு பாத்திரத்தை எடுத்து தண்ணீர் மற்றும் பனீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அதை ஆற விடவும், பின்னர் சில துளிகள் அயோடின் டிஞ்சரைச் சேர்த்து கொதிக்க வைக்கவும். நிறம் நீல நிறமாக மாறுகிறதா என்பதைக் கவனிக்கவும். அனலாக் பனீர் அதன் நிறத்தை நீல நிறமாக மாறும், வழக்கமான பனீர் வெள்ளை நிறமாகவே இருக்கும்.
பக்க விளைவுகள்
அனலாக் பனீரில் உள்ள டிரான்ஸ் கொழுப்புகள் இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும்.
அனலாக் பனீரில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் ஸ்டார்ச் அதிகமாக உள்ளது, இதனைத் தொடர்ந்து உட்கொண்டால் எடை அதிகரிக்கும்.
சில சேர்க்கைகள் மற்றும் பதப்படுத்திகள் உடலின் ஹார்மோன் சமநிலையில் தலையிடலாம்.
ஸ்டார்ச் மற்றும் செயற்கை சேர்க்கைகள் வயிற்று உப்புசம், மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
அனலாக் பனீரைத் தொடர்ந்து உட்கொள்வது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
முடிவு
உண்மையான பனீர் அனலாக் பனீரைவிட விலை அதிகம் என்றாலும், உண்மையான பனீர் ஆரோக்கியமும் ஊட்டச்சத்தும் நிறைந்தது மற்றும் தூய்மையானது. உகந்த ஆரோக்கியத்தையும் ஊட்டச்சத்தையும் பெற, பாலில் இருந்து தயாரிக்கப்படும் உண்மையான பனீர் மட்டுமே சிறந்தது. பனீர் வாங்கும் போது, எப்போதும் லேபிளில் உட்பொருட்களைச் சரிபார்த்து, அதன் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த எளிய சோதனைகளைப் பயன்படுத்துங்கள். நல்ல தரமான உணவில் முதலீடு செய்வது உங்கள் உடல்நலத்தைப் பாதுகாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
பொறுப்புத் துறப்பு:
உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.