கோடைகாலம் என்பது விடுமுறைகள், மகிழ்ச்சி மற்றும் அதிகமான சூரிய ஒளி ஆகியவற்றுக்கான நேரம், ஆனால் இது கடுமையான வெப்பம், நீரிழப்பு அபாயங்கள், தோல் எரிச்சல் மற்றும் அதீத சோர்வு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. வெப்பநிலை அதிகரிக்கும் போது, ​​ குறிப்பாக குழந்தைகளுக்கு ஆரோக்கியமான மற்றும் மாறுபட்ட உணவு தேவைப்படுகிறது, இது அவர்களின் ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல் அவர்களை குளிர்ச்சியாகவும், நீர்ச்சத்துடனும், ஊட்டச்சத்துடனும் வைத்திருக்கிறது.
Summer diet for kids

கோடைகாலத்தில் சேர்க்க வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் உட்பட, குழந்தைகளுக்கு ஏற்ற கோடைகால உணவுமுறை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

கோடைகாலத்தில் குழந்தைகள் ஏன் ஆரோக்கியமான உணவை சாப்பிட வேண்டும்?

குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருப்பார்கள், விளையாட்டுகளிலும் கோடைகால முகாம்களிலும் பங்கேற்பார்கள். அதே நேரத்தில், அதிக வெப்பநிலை வியர்வை மூலம் திரவங்களை வெளிவரச் செய்கிறது, இது சரியாக நிர்வகிக்கப்படாவிட்டால் நீரிழப்பு, சோர்வு மற்றும் செரிமான பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

நன்கு திட்டமிடப்பட்ட மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட கோடைக்கால உணவுமுறையின் பயன்கள்:

  • நீர்ச்சத்தைப் பராமரிக்கிறது மற்றும் இழந்த எலக்ட்ரோலைட்டுகளை மீட்கிறது
  • வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்கி, கோடைகால தொற்றுகளைத் தடுக்கிறது
  • செரிமான செயல்முறையை மேம்படுத்தி, மலச்சிக்கலைத் தடுக்கிறது
  • ஆற்றலை அதிகரித்து, குழந்தையைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது
  • வெப்பம் தொடர்பான பொதுவான உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்கிறது

பின்பற்றப்பட வேண்டிய கோடைக்கால உணவு குறிப்புகள்

நீர்ச்சத்து அவசியம்

கோடையில் குழந்தைகள் எளிதில் நீரிழப்புக்கு ஆளாகின்றனர்; எனவே, உங்கள் குழந்தைகள் நாள் முழுவதும் ஏராளமான திரவங்களை, முக்கியமாக தண்ணீரை குடிக்க ஊக்குவிக்கவும். மேலும், வீட்டில், பூங்காவில் அல்லது பயணத்தில் இருந்தாலும், அவர்களிடம் ஒரு தண்ணீர் பாட்டிலை கையில் எடுத்துச் செல்லச் சொல்லுங்கள். தர்பூசணி, வெள்ளரிக்காய், முலாம்பழம் மற்றும் ஆரஞ்சு போன்ற நீர் நிறைந்த பழங்களை அவர்களுக்கு கொடுங்கள், அவை நீர்ச்சத்தை வழங்குவது மட்டுமல்லாமல் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் தேவைகளையும் பூர்த்தி செய்கின்றன.

மேலும், உங்கள் குழந்தை குளிர்பானங்கள் மற்றும் சோடாக்கள், ஃப்ரூட் ட்ரிங்குகள் மற்றும் விளையாட்டு பானங்கள் போன்ற பிற சர்க்கரை பானங்களை சாப்பிடுவதைக் கட்டுப்படுத்துங்கள்.

ஃப்ரெஷ்ஷான பழங்கள்/காய்கறிகளைச் சேர்க்கவும்

கோடைக்காலம் என்பது ஃப்ரெஷ்ஷான பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சாப்பிடுவதற்கு சரியான நேரமாகும். உங்கள் குழந்தையின் உணவில் பெர்ரி, முலாம்பழம், மாம்பழம் மற்றும் அன்னாசி போன்ற வண்ணமயமான புதிய பழங்களைச் சேர்க்கவும். இவை சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களையும் கொண்டுள்ளன. அதேபோல், தக்காளி, கேரட், குடை மிளகாய் மற்றும் கீரைகள் போன்ற பல வகையான காய்கறிகளை சாலடுகள், சாண்ட்விச்கள் அல்லது பொறியலில் சேர்த்து, உங்கள் குழந்தைகளுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை அளியுங்கள்.

குளிர்ச்சியான கோடை விருந்துகள்

ஆரோக்கியமற்ற, குப்பை உணவுகளுக்கு பதிலாக புத்துணர்ச்சியூட்டும் கோடை விருந்துகளை சாப்பிடுங்கள். மாம்பழம், பெர்ரி, கிவி அல்லது தர்பூசணி போன்ற ஃப்ரெஷ்ஷான பழங்களை இளநீர் அல்லது தயிரில் கலந்து பாப்சிக்கல் அச்சுகளில் ஊற்றி, வீட்டிலேயே பாப்சிகல்ஸ் செய்து குழந்தைகளுக்குக் கொடுங்கள். மேலும், நீங்கள் பழங்கள் அல்லது பாதாம் முந்திரி போன்றவற்றுடன் குளிர்ந்த தயிரைக் கலந்து கொடுக்கலாம், இது வெயில் காலத்தில் ஆரோக்கியமான விருந்தாக அமையும்.

சமச்சீர் உணவு

குழந்தைகளுக்கு ஜீரணிக்க எளிதான மற்றும் முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்கும் லேசான மற்றும் சீரான உணவை வழங்குவது முக்கியம். கொழுப்பு நீக்கப்பட்ட இறைச்சிகள், பருப்பு வகைகள், பனீர் அல்லது டோஃபு போன்ற புரதம் நிறைந்த உணவுகளைப் பழுப்பு அரிசி, கோதுமை ரொட்டி அல்லது முழு கோதுமை பாஸ்தா போன்ற முழு தானியங்களுடன் சேர்த்துக் கொடுங்கள். மேலும், உணவில் ஏராளமான ஃப்ரெஷ்ஷான காய்கறிகளைச் சேர்த்து, நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரித்திடுங்கள், செரிமானத்தை மேம்படுத்துங்கள். வெப்பமான காலநிலையில் உங்கள் குழந்தைகளை சோம்பலாகவும், சங்கடமாகவும் உணர வைக்கும் பலமான, கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்கவும்.

வெயிலில் இருந்து பாதுகாத்திடுங்கள்

ஊட்டச்சத்து தேவைகளுக்கு கவனம் செலுத்துவதோடு மட்டுமல்லாமல், சூரியனின் தீங்கு விளைவிக்கும் அபாயங்களிலிருந்து உங்கள் குழந்தையைப் பாதுகாப்பதும் மிக முக்கியம். எனவே, வெளியே செல்லும்போது அதிக SPF கொண்ட சன்ஸ்கிரீன், தொப்பிகள் மற்றும் சன்கிளாஸ்களைப் பயன்படுத்த அவர்களை ஊக்குவிக்கவும். வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் வெளிப்புற செயல்பாடுகளைக் குறைத்திடுங்கள், முடிந்தவரை நிழலில் இருங்கள்.

கோடைகாலத்தில் குறைக்க வேண்டிய உணவுகள்

சில உணவுகள் வெப்பத்தை அதிகரிக்கும் அல்லது நீரிழப்பை ஏற்படுத்தும்::
• சமோசா, பக்கோடாக்கள் அல்லது உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற வறுத்த சிற்றுண்டிகள்
• கார்பனேற்றப்பட்ட பானங்கள் மற்றும் பாட்டில் பானங்கள்
• குப்பை உணவுகள்
• அதிக காரமான அல்லது எண்ணெய் நிறைந்த உணவுகள்
• சாக்லேட் மற்றும் மிட்டாய்கள்

மாதிரி கோடை உணவுமுறை

காலை: 1 கப் பாதாம் பால்
காலை உணவு: 1 கப் காய்கறி போஹா மற்றும் 1 கப் மாம்பழ ஸ்மூத்தி அல்லது 1 கோதுமை ரொட்டி, அவகேடோ சீஸ் டோஸ், மற்றும் 1 கப் மிக்ஸ்டு ஃப்ரூட் பஞ்ச்
மதியம்: 1 கிண்ணம் தர்பூசணி, முலாம்பழம் அல்லது ஆரஞ்சு, ஒரு கிளாஸ் இளநீர்
மதிய உணவு: 1 கப் அரிசி, ½ கப் ராஜ்மா, 1 கப் கீரை மற்றும் ½ கப் தயிர்
மாலை சிற்றுண்டி: தயிர் உலர்ந்த பழங்கள் அல்லது சப்போட்டா மில்க் ஷேக்
இரவு உணவு: 2 ரொட்டி, ½ கப் பனீர், குடைமிளகாய் பொறியல் மற்றும் ½ கப் சாலட் அல்லது 2 கேரட் தோசை மற்றும் பச்சை பயறு குழம்பு மற்றும் 1/2 கப் வெள்ளரி சாலட்

முடிவுரை

குழந்தைகளுக்கான கோடைக்கால உணவை கவனமாக உருவாக்குவது அவர்களின் ஆற்றல், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது. நீர்ச்சத்து மற்றும் சக்தி நிறைந்த உணவுகளைச் சேர்ப்பதில் கவனம் செலுத்துங்கள், மேலும் சர்க்கரை நிறைந்த குப்பையான அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் கொடுப்பதைத் தவிர்க்கவும். சரியான உணவுத் தேர்வுகள் மூலம், உங்கள் குழந்தை எந்த உடல்நலக் குறைபாடுகளும் இல்லாமல் கோடைகாலத்தின் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்.

பொறுப்புத் துறப்பு:

உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.