இருமல் என்பது தொண்டை மற்றும் நுரையீரலில் உள்ள எரிச்சலை அகற்றுவதற்கான ஓர் இயற்கையான அனிச்சை செயலாகும். இது சுவாசப்பாதைகளைத் தடுக்கக்கூடியவற்றை நீக்கி, நீங்கள் எளிதாக சுவாசிக்க உதவுகிறது. வறட்டு இருமலுக்குப் பொதுவான காரணம் தொற்று ஆகும். வறட்டு இருமல் தொண்டையில் கூச்ச உணர்வை ஏற்படுத்துகிறது இது பெரும்பாலும் சளி அல்லது கோழை இல்லாமல் தொண்டையில் உண்டாகும் எரிச்சலால் ஏற்படுகிறது. வறட்டு இருமலால் நுரையீரல் அல்லது நாசிப் பாதைகளில் இருந்து சளியை, கோழையை அல்லது எரிச்சல் ஏற்படுத்துபவற்றை அகற்ற முடியாது.

home remedy

சிலருக்கு சளி அல்லது காய்ச்சலுக்குப் பிறகும் வறட்டு இருமல் பல வாரங்கள் நீடிக்கும். நாசி குழியின் பின்புறத்தில் இருந்து தொண்டைக்குள் குவிந்த சளி, ஆஸ்துமா மற்றும் GERD உள்ளிட்ட பல நிலைமைகளால் அவை ஏற்படலாம் மற்றும் சிகரெட் புகை போன்ற சுற்றுச்சூழல் நச்சுகளுக்கு தொடர்ந்து வெளிப்படுவதாலும் ஏற்படலாம். வறட்டு இருமல் மிகவும் தொந்தரவாக இருக்கலாம். மேலும் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் என இருவருக்கும் ஏற்படலாம்.

வறட்டு இருமலுக்கு ஆறுதல் அளிக்க உதவும் பல மருத்துவ சிகிச்சைகள் உள்ளன, இருப்பினும், இயற்கை வைத்தியம் வறட்டு இருமலைக் குறைக்க உதவும். உங்களுக்குத் தொடர்ந்து இருமல் வந்தால், உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.

சரி, வறட்டு இருமலுக்கான இயற்கை வைத்தியம் அனைவருக்கும் ஒரே விதமான தீர்வை அளிப்பதில்லை, உங்களுக்கு எது சிறந்தது என்பதைக் கண்டறிவதற்கு முன் நீங்கள் இந்த வைத்தியங்களை முயற்சிக்க வேண்டியிருக்கும். வறட்டு இருமலில் இருந்து நிவாரணம் பெற இந்த வீட்டு வைத்தியங்களில் சிலவற்றை முயற்சித்துப் பாருங்கள்.

வறட்டு இருமலுக்கு இயற்கை வைத்தியம்

தேன்

பகலிலும் இரவிலும் ஏற்படக்கூடிய இருமலுக்குத் தேன் ஒரு தீர்வாகக் கருதப்படுகிறது. இது 1 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் பயன்படுத்தப்படலாம். தேனின் சக்திவாய்ந்த பாக்டீரியா எதிர்ப்புத் தன்மைகள் தொண்டை எரிச்சல் மற்றும் வறட்டு இருமல் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற உதவுகிறது. குழந்தைகளின் இரவு நேர இருமலைக் குறைப்பதில் சில இருமல் மருந்துகளில் உள்ள கூறுகளைவிட தேனில் அதிக சக்தி வாய்ந்த கூறுகள் இருக்கின்றன என்று ஆய்வுகள் கூட தெரிவிக்கின்றன.

உதவிக்குறிப்பு:

நீங்கள் ஒரு தேக்கரண்டி தேனை தினமும் மூன்று முறை சாப்பிடலாம் அல்லது தேநீர் அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம். 1 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தேன் கொடுக்க வேண்டாம்.

மஞ்சள்

இன்றியமையாத மருத்துவ மற்றும் சிகிச்சைப் பண்புகளைக் கொண்ட பல ஆயுர்வேத சூத்திரங்களில் மஞ்சள் ஒரு முக்கியமான உட்பொருளாக உள்ளது. மஞ்சளில் உள்ள குர்குமின் ஆன்டிஆக்ஸிடன்ட், அழற்சி எதிர்ப்பு, ஆன்டிவைரல் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. மேல் சுவாச பிரச்சனைகள், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் ஆஸ்துமா போன்றவற்றுக்கு சிகிச்சை அளிப்பதில் இது ஆற்றல் வாய்ந்தது. ஆயுர்வேத மருத்துவத்தில், மஞ்சள் வறட்டு இருமல் மற்றும் பிற சுவாச பிரச்சினைகளைக் குணப்படுத்த மஞ்சள் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது.

உதவிக்குறிப்பு:

அதிகபட்ச நன்மைகளைப் பெற, எப்போதும் மஞ்சளை கருப்பு மிளகுடன் கலந்திடுங்கள், அப்போது இரத்தத்தில் குர்குமின் சிறப்பாக உறிஞ்சப்படுகிறது. 1 தேக்கரண்டி மஞ்சள் மற்றும் 1/8 தேக்கரண்டி கருப்பு மிளகு ஆகியவற்றை எடுத்து நன்றாக கொதிக்க வைக்கவும். இந்தக் கஷாயம் வறட்டு இருமலைத் தணிக்கும். இப்போது மஞ்சள் மாத்திரை வடிவத்திலும் கிடைக்கிறது.

இஞ்சி

ஊட்டச்சத்துகளும், மிகச் சிறந்த ஆரோக்கிய-நன்மை தன்மைகளைக் கொண்ட பயோஆக்டிவ் கலவைகளும் நிறைந்த ஆரோக்கியமான மசாலாப் பொருட்களில் இஞ்சியும் ஒன்றாகும். இஞ்சியின் வலுவான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டி வலி, தொண்டை புண் மற்றும் இருமல் ஆகியவற்றைத் தணிப்பதாக அறியப்படுகிறது. பல மூலிகை தேநீர் மற்றும் சூத்திரங்களில் இஞ்சி ஒரு முக்கிய மூலப்பொருளாக உள்ளது.

உதவிக்குறிப்பு:

வெதுவெதுப்பான நீரில் உறித்த அல்லது நறுக்கிய இஞ்சியைக் காய்ச்சி, தேன் சேர்க்கவும். இந்த இஞ்சி டீயைப் பருகினால் வறட்டு இருமல் குணமாகும். மேலும், வறட்டு இருமலில் இருந்து நிவாரணம் பெற இஞ்சியை மென்றும் சாப்பிடலாம். நீங்கள் காப்ஸ்யூல் வடிவிலும் இஞ்சியை எடுத்துக் கொள்ளலாம்.

மார்ஷ்மெல்லோ ரூட்

மார்ஷ்மெல்லோ ரூட் என்பது பாரம்பரிய மருத்துவத்தில் அதன் குறிப்பிடத்தக்க சிகிச்சை நடவடிக்கைகளுக்காக பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு வகையான மூலிகையாகும். இது வறட்டு இருமலைத் தணிக்கவும், தொண்டை எரிச்சலைக் குணப்படுத்தவும் லோசன்ஜ்களில் முக்கிய மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த வேர்கள் அவற்றின் சாத்தியமான பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளின் காரணமாக சுவாச நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகின்றன. இந்த வேரின் மூக்கடைப்பை நீக்கும் தன்மை மற்றும் ஆற்றுப்படுத்தும் தன்மை, சளியை தளர்த்தவும், சுவாசத்தை மேம்படுத்தவும் சுவாசப்பாதைகளைத் திறக்கும்.

புதினா

மெத்தனாலைக் கொண்டிருக்கும் புதினா தொடர்ந்து வரும் வறட்டு இருமலினால் எரிச்சல் அடையும் தொண்டையில் உள்ள நரம்பைத் தணிக்க உதவுகிறது. இது வலியில் இருந்து நிவாரணம் அளித்து, இருமலுக்கான தூண்டுதலைக் குறைக்கிறது. இது தவிர, புதினா வலுவான பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டிவைரல் செயல்களைக் கொண்டிருப்பதாகவும், சளியைக் குறைக்கவும் மற்றும் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

உதவிக்குறிப்பு:

வறட்டு இருமலில் இருந்து நிவாரணம் பெற, ஒரு கப் தண்ணீரில் சில புதினா இலைகளைக் கொதிக்கவைத்து, உறங்கும் முன் இந்த புத்துணர்ச்சியூட்டும் தேநீரை அருந்தவும். புதினா மாத்திரைகள் கடைகளில் எளிதில் கிடைக்கும். புதினா எண்ணெய் நறுமண சிகிச்சையிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

 மசாலா டீ

மசாலா டீ என்பது தொண்டை புண் மற்றும் வறட்டு இருமல் போன்ற பல பிரச்சினைகளுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு பழமையான தீர்வாகும். மசாலா டீ என்பது கிராம்பு, ஏலக்காய் போன்ற பல பொருட்களின் கலவையாகும், இது ஒரு சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்டாகவும், அழற்சி எதிர்ப்பியாகவும் செயல்படுகிறது மற்றும் இயற்கையான சளி நீக்கியாகவும் செயல்படுகிறது.

கேப்சைசின்

கேப்சைசின் என்பது மிளகாயில் காணப்படும் ஒரு உயிர்வேதியியல் கலவை ஆகும், இது நாள்பட்ட இருமலைக் குறைக்கப் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு காப்ஸ்யூல் வடிவில் கிடைக்கிறது. மேலும், வெதுவெதுப்பான நீரில் சில துளிகள் சிவப்பு மிளகாய் சாறு சேர்த்து தேநீர் காய்ச்சலாம்.

உதவிக்குறிப்பு:

கேப்சைசின் அடிப்படையிலான மருந்துகள் குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படவில்லை.

முடிவுரை:

உங்கள் வறட்டு இருமலுக்கு நிவாரணம் அளிக்கும் பல பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் உள்ளன. வழக்கமாக, வறட்டு இருமல் தானாகவே சரியாகிவிடும், ஆனால் இருமல் மற்ற அறிகுறிகளுடன் இருந்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள், இதில் பின்வருவன அடங்கும்:

  • சுவாச பிரச்சனைகள்
  • மூச்சுத்திணறல்
  • நெஞ்சு வலி
  • முதுகு வலி
  • காய்ச்சல்
  • குளிர்

பொறுப்புத் துறப்பு:

உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.