சூடான நீரில் அல்லது தேநீரில் எலுமிச்சை மற்றும் தேனை  கலந்து குடிப்பதால் ஏன் புத்துணர்ச்சி கிடைக்கிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

எலுமிச்சையும் தேனும் முற்றிலும் மாறுபட்ட பண்புகளைக் கொண்டிருந்தாலும், சரியான அளவுகளில் அவற்றைக் கலந்தால் அவை அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன.

எலுமிச்சையும் தேனும் கலந்த நீர் ஓர் ஆரோக்கியமான அமுதம் போன்றது, ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இந்த பானம் கொழுப்பை எரிக்க உதவுகிறது, முகப்பருவை நீக்குகிறது மற்றும் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.
Lemon and honey water

தேனில் ஆன்டிஆக்ஸிடன்ட்களான ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஃபீனாலிக் கலவைகள், அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன.

வைட்டமின் சி மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த எலுமிச்சை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும், நச்சு நீக்கம் செய்வதிலும், இரைப்பையை காலி செய்யும் நேரத்தைத் தாமதப்படுத்துவதிலும் மற்றும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் உதவுகிறது.

எலுமிச்சை மற்றும் தேன் கலந்த நீரின் நன்மைகளைப் பார்ப்போம்:

நச்சு நீக்கும் பானம்

எலுமிச்சையும் தேனும் கலந்த நீர் ஓர் இயற்கையான நச்சு நீக்கும் பானமாகச் செயல்படுகிறது, மேலும் இது உடலில் நச்சுகளை நீக்குவதோடு உடனடி ஆற்றலையும் வழங்குகிறது. வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் இதனை கலந்து குடிக்கவும். தேன் தூய்மையானதாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆற்றலை அதிகரிக்கிறது

இந்த பானம், உடற்பயிற்சியின் போது உங்களுக்கு விரைவான ஆற்றலை வழங்கும். இது கடுமையான உடற்பயிற்சிகளுக்குப் பிறகு ஆற்றல் மட்டங்களை நிலைப்படுத்த உதவுகிறது.

செரிமானத்தை ஊக்குவிக்கிறது

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை மற்றும் தேன் கலந்து குடிப்பது மலச்சிக்கலைப் போக்கவும் செரிமானத்தை ஊக்குவிக்கவும் உதவும் ஒரு சிறந்த பானமாகும். இந்தப் பானம் பெருங்குடலை சுத்தப்படுத்தவும், உடலில் செரிமானமாகாத உணவு மற்றும் நச்சுகளை அகற்றவும் உதவுகிறது.

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

இந்த பானம் வைட்டமின் சி, மற்றும் பி காம்ப்ளக்ஸ், பாஸ்பரஸ், கால்சியம், மற்றும் மெக்னீசியம் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டது. இந்த ஊட்டச்சத்துக்கள் உடலை தொற்றுகளிலிருந்து பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், ஆற்றலை அதிகரிக்கவும், நச்சுகளை அகற்றவும், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைத் தடுக்கவும் உதவுகின்றன.

தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

இந்த பானம் சருமத்திற்கு அதிக பயனளிக்கிறது. பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்த இது ஒரு இயற்கையான சுத்தப்படுத்தியாகச் செயல்படுகிறது, இது இரத்தத்தை சுத்திகரிக்கவும், கொலாஜனை அதிகரிக்கவும், உங்கள் சருமத்தை பளபளப்பாகவும் மிருதுவாகவும் வைத்திருக்கவும் உதவுகிறது.

எடையைக் குறைக்க உதவுகிறது

எலுமிச்சை மற்றும் தேன் கலந்த தண்ணீர் உங்கள் நாளைத் தொடங்க ஒரு சரியான பானம். வெதுவெதுப்பான நீரில் சில துளிகள் தேன் மற்றும் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்ப்பது வளர்சிதை மாற்ற செயல்பாட்டை அதிகரிக்கிறது, இதன் மூலம் கொழுப்பை எரிக்க உதவுகிறது.

ஊட்டச்சத்துகள்

தேன்

சர்க்கரைக்கு மாற்றாக, பல ஆண்டுகளாக பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு சுவையான, ஆரோக்கியமான மாற்று தேனாகும். இந்த தங்க திரவம் வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள், அமினோ அமிலங்கள் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட உயிரியல்ரீதியாக செயல்படும் கூறுகளை உள்ளடக்கிய ஊட்டச்சத்துக்களின் புதையலைக் கொண்டுள்ளது. உயர்தர தேனில் பல கரிம அமிலங்கள் மற்றும் பீனாலிக் சேர்மங்கள் உள்ளன. வீரியமிக்க இந்தச் சேர்மங்களின் கலவை தேனுக்கு ஆன்டிஆக்ஸிடன்ட் சக்தியை வழங்குகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்களின் நன்மை ஃப்ரீ ரேடிக்கல் சேதத்தை எதிர்த்துப் போராடுகிறது, அழற்சியைக் குறைக்கிறது மற்றும் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. தேனின் முழு நன்மையையும் பெற எப்போதும் உயர்தர கரிம தேனைத் தேர்ந்தெடுக்கவும்.

எலுமிச்சை

எலுமிச்சை பல அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த ஓர் ஊட்டச்சத்து சக்தியாகும். வைட்டமின் சி நிறைந்துள்ள இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு தோல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது, அதே நேரத்தில் வைட்டமின் B6 உணவை ஆற்றலாக மாற்றவும் உதவுகிறது.

எலுமிச்சையில் உள்ள முக்கியமான தாவர சேர்மங்கள்:

சிட்ரிக் அமிலம். எலுமிச்சையில் உள்ள செழுமையான கரிம அமிலங்களில் ஒன்றான சிட்ரிக் அமிலம் சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

ஹெஸ்பெரிடின்: இந்த ஆன்டிஆக்ஸிடன்ட் முக்கிய உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் இருதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.

டையோஸ்மின்: இந்த தாவர சேர்மம் தசை தொனியை மேம்படுத்துகிறது மற்றும் நாள்பட்ட அழற்சியைக் குறைக்கிறது

எரியோசிட்ரின்: இந்த ஆன்டிஆக்ஸிடன்ட் எலுமிச்சை தோல் மற்றும் சாற்றில் ஏராளமாக உள்ளது

டி-லிமோனீன்: முக்கியமாக எலுமிச்சை தோலில் காணப்படுகிறது. இது நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்று கோளாறுகளைத் தடுக்கும்.

பொறுப்புத் துறப்பு:

உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.