நீங்கள் காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்களுக்கு ஓய்வும் ஆறுதல் தரும் உணவும் தேவை. ஆய்வுகளின்படி, உடல் வெப்பநிலை ஒவ்வொரு டிகிரி அதிகரிக்கும்போது உங்கள் வளர்சிதை மாற்ற விகிதம் 7% தூண்டப்படுகிறது. மேலும், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உங்கள் உடலுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது.

ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது ஏற்படக்கூடிய பொதுவான அறிகுறிகள் பசியின்மையும் சோர்வும். சரியான உணவு, போதுமான ஓய்வு, மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகள் ஆகியவற்றுடன் அதிக திரவங்களை உட்கொள்வது நீங்கள் குணமடைவதற்கு உதவும்.

பசியைத் தூண்டுவது மட்டுமல்லாமல் இருமல், சளி போன்ற அறிகுறிகளைத் தணித்து, வேகமாகக் குணமடைவதற்கு உதவும் உணவுமுறை கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் பின்பற்றப்படுகிறது.

இங்கே தயாரிக்க எளிதான, ஆரோக்கியம் தரும் 5 சிறந்த ஆறுதல் உணவுகளை அளித்துள்ளோம்.

சிறந்த ஆறுதல் தரும் 5 உணவுகள்

1. சூப்கள்

இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது சூப்கள். ஏனெனில், அவற்றில் நோயை எதிர்த்துப் போராடுவதற்கு மிகவும் அவசியமான அனைத்து சக்திவாய்ந்த ஊட்டச்சத்துகளும் நிறைந்துள்ளன. சூப்களில் மசாலா, மூலிகைகள் மற்றும் காய்கறிகளை சரியான அளவுகளில் சேர்ப்பது காய்ச்சலைக் குறைக்கவும், மூக்கடைப்பை குணப்படுத்தவும், நீரிழப்பைத் தடுக்கவும், அழற்சிகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. சிக்கன் சூப் அல்லது காய்கறி சூப் என எதுவாக இருந்தாலும், அது உங்கள் சுவாசப்பாதையில் ஏற்பட்டுள்ள அடைப்பையும் அழற்சியையும் தடுப்பதன் மூலம் சளியைத் தணிக்க உதவும்.

2. தேநீர்

சளி மற்றும் காய்ச்சலினால் ஏற்படக்கூடிய பல அறிகுறிகளுக்குத் தேநீர் சிறந்த தீர்வாகும். ஒரு கப் சூடான தேநீர் பருகுவது, சளியினால் ஏற்படும் அசெளகரியங்களைக் குறைக்கும் அதே நேரத்தில் நீரேற்றத்துடன் இருக்கவும் உதவும் ஒரு சிறந்த வழியாகும். தேநீரில் காணப்படும் இயற்கையான பொருளான பாலிஃபீனால் டானின்கள் வலுவான ஆன்டிஆக்சிடன்ட்களையும் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளன. பிளாக் டீ தொண்டையில் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் குறைத்து, சளி மற்றும் காய்ச்சல் விரைவாக குணமடைய உதவும்.

3. ஓட்ஸ்

ஓட்ஸ் ஒரு மென்மையான, எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவாகும், இது நோயின் போது தேவையான கலோரிகள், வைட்டமின் மற்றும் தாதுக்களை உங்களுக்கு வழங்குகிறது. ஓட்ஸில் உள்ள புரதங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களின் அளவு குடலில் ஏற்படும் அழற்சியைக் குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

4. இளநீர்

நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது இளநீர் குடிப்பது நல்லது. இது உங்களை நன்கு நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது. காய்ச்சல் வரும்போது இளநீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்பது ஒரு கட்டுக்கதை. நீங்கள் காய்ச்சல், வாந்தி அல்லது வயிற்றுப்போக்கினால் அவதிப்பட்டால் அதிகப்படியான நீரையும் எலக்ட்ரோலைட்டுகளையும் இழக்க நேரிடும். ஆனால், உடலுக்கு சரியான நீர்ச்சத்து அவசியம், நீர்ச்சத்திற்குத் தேவையான குளுக்கோஸ் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளின் சரியான கலவை இளநீரில் உள்ளது.

5. வாழைப்பழங்கள்

வாழைப்பழங்கள் நோயாளிகளுக்கு ஏற்றவை. அவற்றில் கலோரிகள், பொட்டாசியம், வைட்டமின்கள், கரையக்கூடிய நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. இவை அனைத்தும் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன. வாழைப்பழங்கள் சாப்பிட எளிதானவை, மேலும் வயிற்றுப்போக்கிற்கு பொதுவாக பரிந்துரைக்கப்படும் BRAT உணவின் (வாழைப்பழங்கள், அரிசி, ஆப்பிள், டோஸ்ட்) ஒரு பகுதியாகும்.

பொறுப்புத் துறப்பு:

உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.