இயற்கை நமக்கு பல்வேறு வகையான மூலிகைகளையும், மசாலாப் பொருட்களையும் வழங்கியுள்ளது. அவை ஒவ்வொன்றும் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. உணவிற்கு சுவையைக் கூட்டுவது துவங்கி உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிப்பது வரை ஒரு சிட்டிகை மசாலாவில் பல நன்மைகள் ஒளிந்துள்ளன. இவற்றில், கிராம்பு ஒரு மிக அற்புதமான மசாலா பொருளாகத் தனித்து நிற்கிறது, இது சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் பொதுவான உடல்நலக் கோளாறுகளுக்கு ஒரு தீர்வாகவும் செயல்படுகிறது.
பொதுவாகப் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருளான கிராம்பு அல்லது லவங்கம், அதன் மருத்துவ குணங்களுக்காகப் பல ஆண்டுகளாக மிகவும் மதிப்புமிக்கதாக உள்ளது. இது அதன் நறுமணத்திற்காகவும் சுவைக்காகவும் சமையலறை அலமாரியில் ஒரு முக்கிய மசாலாப் பொருளாகக் கருதப்படுகிறது. முழுவதுமாக உட்கொண்டாலும், மென்று சாப்பிட்டாலும், அல்லது கஷாயமாகக் குடித்தாலும், கிராம்பு பல்வேறு வகையான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
கிராம்பு தண்ணீரைக் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதா கெட்டதா? அதன் நன்மைகள், அதை உங்கள் உணவில் சேர்ப்பதற்கான வழிகள் மற்றும் சாத்தியமான பக்க விளைவுகள் பற்றி மேலும் அறிய இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.
ஆரோக்கிய நன்மைகள்
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது
கிராம்பு ஃபிளாவனாய்டுகள், பீனால்கள் மற்றும் யூஜெனால் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆரோக்கியமான செல்களை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன மற்றும் அழற்சியைக் குறைக்கின்றன. இதனால், கிராம்பு நீரைக் குடிப்பது புற்றுநோய், இதய நோய் மற்றும் நரம்பு கோளாறுகள் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைத் தடுக்கிறது மற்றும் ஒட்டுமொத்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
செரிமான ஆரோக்கியம்
ஒரு பலமான விருந்துக்குப் பிறகு கிராம்பை மெல்லுவது வாய் மற்றும் குடலில் செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டுவதன் மூலம் செரிமான செயல்முறைக்கு உதவுகிறது. இது வாயு, அழற்சி மற்றும் அஜீரணத்தைப் போக்க உதவும் கார்மினேட்டிவ் பண்புகளைக் கொண்ட யூஜெனால் கலவை இருப்பதால் நிகழ்கிறது. இவை தவிர, இரைப்பை பிரச்சினைகளை குணப்படுத்துவதிலும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
கிராம்பில் உள்ள முக்கிய பயோஆக்டிவ் கூறு யூஜெனால் ஆகும், இது கிராம்பு எண்ணெயில் ஏராளமாக உள்ளது. இந்தச் சக்திவாய்ந்த நறுமண எண்ணெயில் கிருமி நாசினிகள், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகளிலிருந்து உடலைப் பாதுகாக்கின்றன மற்றும் தொற்றுகளைத் தடுக்கின்றன. கிராம்பு நறுமண எண்ணெய் வெள்ளை இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்று ஓர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால், கிராம்பு அல்லது கிராம்பு கஷாயம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் உணவை விஷமாக்கும் பாக்டீரியாக்களை அகற்றும்.
கல்லீரலை சுத்தப்படுத்துகிறது
கிராம்பில் உள்ள முதன்மை பயோஆக்டிவ் யூஜெனால் மற்றும் தைமால் கல்லீரல் செல்களைப் பாதுகாக்கும் என்று நம்பப்படுகிறது. கிராம்பு கஷாயம் குடிப்பது புதிய செல்கள் உருவாக உதவுகிறது மற்றும் உடலிலிருந்து கழிவுகளை அகற்றுவதன் மூலமும் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இரத்த சர்க்கரை அளவுகளை நிர்வகிக்கிறது
கிராம்பில் உள்ள வீரியமிக்க உட்பொருளான யூஜெனால் இன்சுலின் ஹார்மோனைப் போலவே செயல்படுகிறது. ஒரு மாதத்திற்கு தினமும் சுமார் 1 முதல் 3 கிராம் கிராம்பு உட்கொள்வது டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு அவர்களின் இரத்த சர்க்கரை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தவும், கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவும். மேலும், மாங்கனீசு நிறைந்த கிராம்பை உணவில் சேர்ப்பது நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும் என்று அறியப்படுகிறது.
மேலும் படிக்க: பளபளப்பான சருமத்திற்கு ஏலக்காய் நீர் நன்மைகள்: செய்முறை, பயன்கள் மற்றும் முன்னெச்சரிக்கைகள்
வலி/அழற்சியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது
கிராம்பில் உள்ள ஒரு முக்கிய சேர்மமான யூஜெனால், வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது என்பதால் கிராம்பு தலைவலி, பல்வலி மற்றும் மூட்டு வலியைப் போக்க உதவுகிறது.
சுவாச ஆரோக்கியம்
கிராம்பு சளியை நீக்கி தொண்டைப் புண்களைத் தணிக்க உதவுகிறது, இது சளி, இருமல் மற்றும் சுவாச நோய்த்தொற்றுகளுக்கு இயற்கையான மருந்தாக அமைந்துள்ளது.
கிராம்பை சாப்பிடுவதற்கான சிறந்த நேரம் எது?
செரிமானம்: செரிமான செயல்முறையை ஆதரிக்கவும், அஜீரணம் மற்றும் உப்பிசத்தைத் தவிர்க்கவும் உணவுக்குப் பிறகு ஒரு கிராம்பை மென்று சாப்பிடுங்கள் அல்லது கிராம்பு தேநீர் அருந்துங்கள்.
நச்சு நீக்கம்: உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்ட காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான கிராம்பு நீரைப் பருகுங்கள்.
சுவாச ஆரோக்கியம்: இருமலைக் குறைக்க, சளி கட்டியிருப்பதைக் கறைக்க மற்றும் நல்ல தூக்கத்தைப் பெற கிராம்பைப் பொடியை சூடான பாலில் கலந்து குடிக்கவும் அல்லது கிராம்பை மென்று சாப்பிடவும்.
நீரிழிவைக் கட்டுப்படுத்துங்கள்: இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உணவுக்கு முன் 1-2 கிராம்புகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் உணவில் கிராம்பைச் சேர்ப்பதற்கான வழிகள்
வெறும் வயிற்றில் தினமும் ஒரு கிராம்பை மென்று சாப்பிடுவது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும்.
ஒரு கிளாஸ் தண்ணீரில் சுமார் 2-3 கிராம்புகளை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் குடிப்பதால் அதன் பலன்களைப் பெறலாம் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம்.
மேம்பட்ட ஆரோக்கியத்திற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் கிராம்பை மூலிகை தேநீர், இஞ்சி தேநீர் அல்லது மஞ்சள் பாலில் சேர்க்கலாம்.
கிராம்புகளை குழம்பு, சூப் ஆகியவற்றில் சேர்த்து சுவையையும் நறுமணத்தையும் அதிகரிப்பதுடன் ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கலாம்.
தேனுடன் கலந்த கிராம்பைப் பொடி செய்து தொண்டை புண் மற்றும் இருமலுக்கு இயற்கையான மருந்தாக எடுத்துக்கொள்ளலாம்.
சாத்தியமான பக்கவிளைவுகள்
கிராம்பு பாதுகாப்பானது மற்றும் பெரும்பாலான மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை, இருப்பினும், அதிகப்படியாக உட்கொள்வது இதற்கு வழிவகுக்கும்:
அதிகப்படியாக உட்கொள்வது வயிற்று எரிச்சல், நெஞ்செரிச்சல் அல்லது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.
கிராம்பு இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கலாம், எனவே நீரிழிவு நோயாளிகள் எவ்வளவு உட்கொள்கிறார்கள் என்பதை கண்காணிக்க வேண்டும்.
(கிராம்புகளில் காணப்படும் யூஜெனாலின்அதிகப்படியான நுகர்வு கல்லீரல் நச்சுத்தன்மைக்கு வழிவகுக்கும்.
சிலருக்கு தோல் எரிச்சல் அல்லது சுவாசப் பிரச்சினைகள் போன்ற ஒவ்வாமைகள் ஏற்படலாம்.
கிராம்பு இரத்தத்தை மெலிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது, இது அறுவை சிகிச்சையின் போது அல்லது அதற்குப் பிறகு அதிக இரத்தப்போக்கு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும். எனவே, எந்தவொரு அறுவை சிகிச்சைக்கும் இரண்டு வாரங்களுக்கு முன்பு கிராம்பை உட்கொள்வதை நிறுத்த வேண்டும்.
முடிவு
கிராம்பை சாப்பிடுவது அல்லது கிராம்பு கஷாயம் குடிப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்துவதற்கு உதவும். இருப்பினும், மிதமாக உட்கொள்வது அவசியம், ஏனெனில் அதிகப்படியாக எடுத்துக்கொள்வது பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். உங்கள் உணவு முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்வதற்கு முன்பு எப்போதும் மருத்துவரை அணுகுங்கள், குறிப்பாக உங்களுக்கு வேறு நோய்கள் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனைப் பெறுவது அவசியம்.
பொறுப்புத் துறப்பு:
உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.