உடலுக்கு ஆற்றலைத் தருவது உணவுதான், இருப்பினும், தவறான நேரத்தில் சாப்பிட்டால், ​​அது உடலுக்கு நன்மையைத் தராமல் அதிக ஆபத்தை ஏற்படுத்தும். ஆம், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் செரிமானம், சரும ஆரோக்கியம் மற்றும் ஆற்றல் நிலைகளில் குறுக்கிடலாம். இரவு வெகுநேரம் கழித்து உணவு உண்பது அல்லது காலை உணவைத் தவிர்ப்பது தற்போது பாதிப்பில்லாததாகத் தோன்றலாம், ஆனால் இறுதியில் நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
Meal timings
நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது மட்டும் முக்கியம் அல்ல, நீங்கள் எப்போது சாப்பிடுகிறீர்கள் என்பதும்கூட முக்கியம். உணவைத் தவிர்ப்பது அல்லது மோசமான உணவு நேரங்கள் குறைந்த ஆற்றல் நிலைகள், தசை இழப்பு, எடை அதிகரிப்பு, வகை 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான ஆபத்து, மனநிலை ஊசலாட்டங்கள் மற்றும் புத்திசாலித்தனமாக சிந்திக்கும் திறன் குறைவது ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் என்பதையும் பல ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. எனவே, சரியான உணவு அட்டவணையை பராமரிப்பது முக்கியம்.

மோசமான உணவு நேரம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் எவ்வாறு பாதிக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள இந்தக் கட்டுரைக்குள் செல்லுங்கள்.

மோசமான உணவு அட்டவணையின் ஆறு உடல்நல பாதிப்புகள்

வளர்சிதை மாற்றத்தில் குறுக்கிடுகிறது

உங்கள் உடலில் தூக்கம், ஹார்மோன்கள் மற்றும் செரிமான செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் ஒரு உள் கடிகாரம் (சர்க்காடியன் ரிதம்) உள்ளது. நீங்கள் இயற்கையான நேரத்தைத் தாண்டி சாப்பிடும்போது, ​​குறிப்பாக இரவில் தாமதமாக சாப்பிடும்போது, ​​அது வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும், இது இதற்கு வழிவகுக்கும்:

  • மெதுவாக கலோரி எரித்தல்
  • அதிகரித்த கொழுப்பு சேமிப்பு
  • அதிக இரத்த சர்க்கரை அளவுகள்

குறிப்பு: உங்கள் வளர்சிதை மாற்றம் மிகவும் சுறுசுறுப்பாகவும் செயல்படுவதாகவும் இருக்கும் பகல் நேரங்களில் அதிகமாகச் சாப்பிடுங்கள்.

தரமற்ற தூக்கம்

தாமதமான இரவு உணவு உங்கள் உடலுக்குத் தேவையான ஓய்வைப் பெறுவதைத் தடுக்கும். படுக்கைக்கு செல்வதற்கு முன் சுவையான அல்லது காரமான உணவுகளை உட்கொள்வது அஜீரணம், அமிலத்தன்மை அல்லது உப்பிசத்தை ஏற்படுத்தலாம், இதனால் நிம்மதியாக தூங்க முடியாது. மேலும், சரியாகத் தூங்காவிட்டால் எடை அதிகரிப்பு, மனநிலை மாற்றங்கள் மற்றும் சோர்வு ஏற்படும்.

குறிப்பு: இரவு 7.00 மணிக்கு முன் அல்லது படுக்கைக்குச் செல்வதற்குக் குறைந்தது 2-3 மணி நேரத்திற்கு முன் இரவு உணவை முடிக்க முயற்சிக்கவும்.

எடை அதிகரிக்கும் ஆபத்து

நீங்கள் கலோரிகளைக் கட்டுப்படுத்தினாலும், தாமதமாக சாப்பிடுவது, முக்கியமாக கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகள் அதிகம் உள்ள உணவு எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. ஏனென்றால், இரவில் செரிமானம் மிகவும் வித்தியாசமாக நடைபெறும்.

குறிப்பு: சீரான உணவு நேரங்களைக் கடைப்பிடிக்கவும், இரவு உணவிற்குப் பிறகு அடிக்கடி சிற்றுண்டி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.

இரத்த சர்க்கரை அளவை பாதிக்கிறது

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் ஒழுங்கற்ற உணவு நேரம் நீண்ட காலத்திற்கு இரத்த சர்க்கரை ஏற்ற இறக்கங்கள் மற்றும் இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகுக்கும். இது டைப் 2 நீரிழிவு நோய் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும். ஏற்கனவே வளர்சிதை மாற்ற நோய்க்குறி அல்லது முன் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் தங்கள் உணவு நேரங்களை சரியாகத் திட்டமிட வேண்டும்.

குறிப்பு: ஒருபோதும் உணவைத் தவிர்க்க வேண்டாம், குறிப்பாக பகலில் முன்கூட்டியே சாப்பிடுவது இரத்த சர்க்கரையை நிலைப்படுத்த உதவுகிறது.

செரிமான பிரச்சனைகளைத் தூண்டுகிறது

படுக்கைக்குச் செல்வதற்கு சற்றுமுன் சாப்பிடுவது அல்லது உணவுகளை முற்றிலுமாகத் தவிர்ப்பது குடல் செயல்பாடு மற்றும் செரிமானத்தைத் தொந்தரவு செய்யலாம். நீங்கள் மிகவும் சோம்பலாக, உப்புசமாக அல்லது வாயு நிறைந்து இருப்பதாக உணரலாம், மேலும் இது அமிலப் பின்னோட்டம் அல்லது குடல் எரிச்சல் போன்ற நிலைகளையும் மோசமாக்கும்.

குறிப்பு: சரியான நேரத்தில் உணவு உண்ணுங்கள், படுப்பதற்கு முன் உங்கள் உடலுக்கு ஜீரணிக்க நேரம் கொடுங்கள்.

கல்லீரலில் அழுத்தம் கொடுக்கிறது

கல்லீரல் உடலை நச்சு நீக்குவதிலும் வளர்சிதை மாற்றத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு முக்கிய உறுப்பாகும். இரவில் தாமதமாக, பலமான உணவுகளை சாப்பிடுவது கல்லீரலை ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில் அயராது உழைக்க கட்டாயப்படுத்துகிறது. இது செரிமானம் மோசமாகி, கொழுப்பு படிந்து, உடலில் அதிக நச்சுகளை உருவாக்கும். காலப்போக்கில், இது பொலிவற்ற சருமத்திற்கும், முன்கூட்டிய வயதான தோற்றத்தைப் பெறுவதற்கும் காரணமாகிறது.

குறிப்பு: சீக்கிரமாக இரவு உணவை உட்கொள்ளுங்கள், படுக்கைக்குச் செல்வதற்கு முன் உங்கள் உடல் உணவை ஜீரணிக்க குறைந்தது 3 மணிநேரம் கொடுங்கள்.

சரியாக சாப்பிடுவதற்கான வழிகாட்டுதல்கள்

காலை உணவை காலை 9 மணிக்கு முன், மதிய உணவை மதியம் 12 மணி முதல் 2 மணிக்குள் மற்றும் இரவு உணவை இரவு 8 மணிக்குள் சாப்பிடுவது சிறந்தது என்று வழிகாட்டப்படுகிறது. மூன்று முக்கிய உணவுகளுக்கு இடையில் குறைந்தது 4 முதல் 5 மணிநேரம் இடைவெளிவிடுங்கள். மதிய உணவுக்கும் இரவு உணவிற்கும் இடையில் பசியைக் கட்டுக்குள் வைத்திருக்க ஒரு இலேசான மாலை சிற்றுண்டி உங்களுக்கு உதவும். இருப்பினும், சீக்கிரமாக இரவு உணவு சாப்பிடும் பழக்கம் உங்களிடம் இருந்தால், நீங்கள் ஒரு மாலை சிற்றுண்டியைச் சேர்க்க வேண்டும்.

ஒவ்வொரு நபரின் உணவுப் பழக்கங்களும் முற்றிலும் வேறுபட்டிருந்தாலும், உணவு முறையில் ஐந்து முக்கிய உணவுக் குழுக்களைச் சேர்ப்பது ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு பொதுவான வழிகாட்டுதலாக, காலை உணவில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் புரதம் இருக்க வேண்டும், மதிய உணவில் மேக்ரோ மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களை வழங்கும் அனைத்து உணவுக் குழுக்களின் சரியான கலவை இருக்க வேண்டும், மாலை சிற்றுண்டி குறைந்தபட்ச அளவில் இருக்க வேண்டும், ஆனால் ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும், மற்றும் இரவு உணவு மதிய உணவைப் போலவோ அல்லது சற்று வித்தியாசமாக ஆனால் அளவில் குறைவாகவோ இருக்க வேண்டும்.

முடிவுரை

குறிப்பாக உணவைப் பொறுத்தவரை, நேரம் தான் எல்லாமே. தவறான நேரத்தில் சாப்பிடுவது தற்போது பாதிப்பில்லாததாகத் தோன்றலாம், ஆனால் காலப்போக்கில், அது உங்கள் வளர்சிதை மாற்றம், எடை, தூக்கம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே அடுத்த முறை நீங்கள் நள்ளிரவில் சிற்றுண்டியைச் சாப்பிட ஆசைப்படும்போது, ​​நீங்கள் எப்போது சாப்பிடுகிறீர்கள் என்பது நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது போலவே முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பொறுப்புத் துறப்பு:

உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.