உடல் பருமன் என்பது ஒரு நாள்பட்ட மற்றும் கடுமையான வாழ்க்கைமுறைக் குறைபாடாகும். இதில் அதிகப்படியான கொழுப்பு உடலின் திசுக்களில் குவிந்து பல உடல்நலப் பிரச்சினைகளைத் தூண்டுகிறது.

உலகெங்கிலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 700 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த உலக மக்கள்தொகையில் கிட்டத்தட்ட 10 சதவீதமாக உள்ளது.

உடல் பருமன் என்பது ஆரோக்கியமற்ற உணவு, போதிய தூக்கமின்மை மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகியவற்றால் தூண்டப்படும் ஒரு வாழ்க்கைமுறைக் குறைபாடாக இருந்தாலும், சில சந்தர்ப்பங்களில் இது மரபணு காரணிகள் அல்லது முன்பே இருக்கும் உடல்நலக் குறைபாடுகள் காரணமாகவும் ஏற்படுகிறது.

இதய நோய், நீரிழிவு மற்றும் மகளிர் நோய் சிக்கல்கள் போன்ற பல நோய்களை உடல் பருமன் தூண்டி உடலுக்குத் தீங்கு விளைவிக்கும். ஆயினும்கூட, ஓர் ஆரோக்கியமான, சுறுசுறுப்பான வாழ்க்கைமுறையைக் கடைபிடிப்பதன் மூலம் வெற்றிகரமாக இதிலிருந்து மீண்டுவரலாம். ஆனால், மிகவும் கடுமையான உடல் பருமனால் பாதிக்கப்பட்டிருந்தால் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் தேவைப்படலாம்.
Obesity

பாதிக்கப்பட்ட நபரின் வாழ்க்கைத் தரத்தை உடல் பருமன் எதிர்மறையாக பாதிக்கிறது. இது அவமானம், குற்ற உணர்வு, குறைவான சுயமரியாதை, பாலியல் பிரச்சினைகள் மற்றும் மனச்சோர்வு போன்ற போக்குகளுக்கு வழிவகுக்கிறது. இது வகை 2 நீரிழிவு நோய், இதய நோய்கள், செரிமான கோளாறுகள் மற்றும் புற்றுநோய்க்குக் கூட காரணமாகிறது.

எனவே, அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கவும், ஆரோக்கியமான எடையை அடையவும், உகந்த உடல் செயல்பாடுகளை மேம்படுத்தவும் உடல் பருமனுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம்.

காரணங்கள்:

உடலால் ஏற்றுக்கொள்ளப்படுவதைவிட அதிக கலோரிகளைச் சாப்பிடுவது தினசரி செயல்பாடு மற்றும் உடற்பயிற்சியின் மூலம் செயல்முறைப்படுத்தப்பட்டு, ஆற்றலாக எரிக்கப்படும்.

தினசரி செயல்முறைகள், செயல்பாடுகள் மற்றும் உடற்பயிற்சியின் மூலம் உடலால் எரிக்கப்படும் கலோரிகளைவிட அதிக கலோரிகளைச் சாப்பிடுவது, உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கைமுறையுடன் இணைந்து, உடல் பருமனை ஏற்படுத்துகிறது. காலப்போக்கில், இந்தக் கூடுதல் கலோரிகள் திசுக்களிலும், உறுப்புகளிலும் சேர்ந்து, மிக அதிக எடை அதிகரிப்பை ஏற்படுத்துகிறது.

உடல் பருமன் ஏற்படுவதற்கான மிகவும் பொதுவான காரணங்கள் பின்வருமாறு:

  • கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள மோசமான உணவை உண்ணுதல்
  • உட்கார்ந்தே இருக்கும், மந்தமான மற்றும் செயல்பாடற்ற வாழ்க்கைமுறையை மேற்கொள்ளுதல்
  • போதுமான அளவு தூங்காமல் இருப்பது ஹார்மோன் மாற்றங்களுக்கு வழிவகுக்கலாம். இது தொடர்ந்து பசி உணர்வுகளைத் தூண்டி, சர்க்கரை, உப்பு, எண்ணெய் மற்றும் கலோரி அதிகமாக உள்ள உணவுகளைச் சாப்பிட தூண்டும்.
  • மரபியல், இது உடலின் வளர்சிதை மாற்றத்தையும், கொழுப்பு எவ்வாறு சேமிக்கப்படுகிறது என்பதையும் பாதிக்கும்
  • வயதாவது, குறைவான தசை அடர்த்திக்கும், மெதுவான வளர்சிதை மாற்ற விகிதத்திற்கும் வழிவகுக்கும். இது எளிதாக எடையை அதிகரிக்க செய்கிறது
  • கர்ப்பம், கர்ப்ப காலத்தில் அதிகரித்த எடையைக் குறைப்பது கடினமாக இருக்கலாம். இது இறுதியில் உடல் பருமனுக்கு வழிவகுக்கிறது

சில மருத்துவ நிலைகளும் கட்டுப்பாடற்ற எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும். இவை பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:

  • பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (PCOS): பெண் இனப்பெருக்க ஹார்மோன்களின் சமநிலையின்மையை ஏற்படுத்தும் ஒரு நிலை
  • ப்ரேடர்-வில்லி நோய்க்குறி: ஒரு தனி நபருக்கு மிக அதிகமான பசியைத் தூண்டும் ஓர் அரிய நிலை
  • கஷிங் சிண்ட்ரோம்: உங்கள் உடலில் கார்டிசோல் என்ற ஹார்மோன் அதிகப்படியான அளவில் இருப்பதால் ஏற்படும் ஒரு நிலை
  • ஹைப்போதைராய்டிசம் (குறைவாகச் செயல்படும் தைராய்டு): தைராய்டு சுரப்பி சில முக்கியமான ஹார்மோன்களை போதுமான அளவு உற்பத்தி செய்யாத நிலை
  • கீல்வாதம்: வயதாகும்போது மூட்டுகள் மற்றும் எலும்புகள் சிதைவது

ஆபத்து காரணிகள்:

பல்வேறு பண்புக்கூறுகள் ஒருவருக்கு உடல் பருமனை ஏற்படுத்துகின்றன, அவை:

  • வேலையிலும் வீட்டிலும் உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கைமுறையை மேற்கொள்வது
  • புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற கெட்ட பழக்கங்கள்
  • போதுமான நேரம் தூங்காமல் இருப்பது
  • வேலை தொடர்பான அல்லது தனிப்பட்ட காரணங்களால், தீவிர மன அழுத்தம் மற்றும் பதட்டம்
  • பெற்றோர்கள், பிற குடும்ப உறுப்பினர்கள் அல்லது நெருங்கிய உறவினர்களிடமிருந்து வந்த மரபியல் நோய்கள்

அறிகுறிகள்:

உடல் எடை மிக அதிகமாக அதிகரிக்க துவங்குகிறது என்பதைக் கண்டறிவதற்கு வேறு எந்த அறிகுறிகளும் இல்லை. ஒரு நபர் திடீரென பதின்பருவத்திலோ அல்லது பெரியவரான பின்போ அல்லது குழந்தை பருவத்திலிருந்தோ உடல் உறுப்புகளிலும் திசுக்களிலும் மிக அதிக அளவு கொழுப்பு சேர்ந்தால், அவர்கள் உடல் பருமன் உள்ளவர்களாகக் கருதப்படுவார்கள்.

ஒரு நபரின் உடல் பருமனின் அளவைக் கண்டறிய  BMI (பாடி மாஸ் இண்டெக்ஸ்) எனப்படும் மெட்ரிக்கை உடல்நல பராமரிப்பு வல்லுநர்கள் பயன்படுத்துகின்றனர். BMI என்பது தனிநபரின் எடையை கிலோகிராமில் எடுத்து, தனிநபரின் உயரத்தை மீட்டர் ஸ்கொயர்டால் வகுப்பதன் மூலம் கணக்கிடப்படுகிறது. அதாவது கிலோ/மீ2.

ஒருவரின் BMI 18.5க்குக் குறைவாக இருந்தால், அந்த எடை குறைவாக இருப்பார். ஆரோக்கியமான உடல் எடைக்கும் உயரத்திற்குமான விகிதம் 18.5 முதல் 22.9 வரை BMI-ஐக் கொண்டிருப்பது. 23 முதல் 24.9 வரம்பில் உள்ள BMI அதிக எடையைக் குறிக்கும். அதே வேளையில், 25 மற்றும் அதற்கு மேல் இருந்தால், அந்த நபர் உடல் பருமனால் அவதிப்படுகிறார் என்று அர்த்தம்.

நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை:

ஒரு நபரின் BMI மற்றும் இடுப்பு சுற்றளவு ஆகியவற்றைக் கணக்கிடுவது நோயாளியின் உடல் பருமனின் அளவை மருத்துவர் பகுப்பாய்வு செய்ய உதவுகிறது. அவர் தினசரி உடல்ரீதியாக எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறார் என்பதை அறிய, அந்த நபரின் வாழ்க்கைமுறை பழக்கவழக்கங்களையும் விசாரிப்பார். இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம், உடல் வெப்பநிலை போன்றவை பரிசோதிக்கப்படும். மேலும் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஏதேனும் அடிப்படை அசாதாரணங்கள் உள்ளனவா என்று சோதிக்கப்படும்.

உடல் பருமனுக்கான சிகிச்சைக்கு முக்கியம் உணவில் மாற்றங்களைச் செய்து நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதே ஆகும். தேவையான வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்சிடென்ட்கள் நிறைந்த பழங்களையும் காய்கறிகளையும் அதிகமாக சாப்பிட வேண்டும். ஒவ்வொரு நாளும் குறைந்தது ஒரு மணிநேரம் தீவிர உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஒழுக்கமான வாழ்க்கைமுறையைக் கடைபிடிப்பது மற்றும் நேர்மறையான பழக்கங்களைப் பின்பற்றுவதே இதன் முக்கிய குறிக்கோளாகும்.

உடல் பருமன் மிகவும் கடுமையானதாக இருந்தால், BMI 30 அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால், எடை இழப்பைத் தூண்டுவதற்கு சில மருந்துகளை மருத்துவர் பரிந்துரைப்பார். சில சூழ்நிலைகளில், பருமனான நபரின் உடலில் இருந்து அதிகப்படியான கொழுப்பை அகற்ற, எண்டோஸ்கோபிக் செயல்முறை அல்லது பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

பொறுப்புத் துறப்பு:

உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.