காலை உணவு என்பது நாள் முழுவதும் மிக முக்கியமான உணவாக கருதப்படுகிறது. இது உடலுக்கு ஆற்றலையும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்கி, தினசரி பணிகளைச் செய்யவும் நாளை சிறப்பாகத் தொடங்கவும் உதவுகிறது.
குழந்தைகளுக்கு காலை உணவு மிகவும் அவசியம். இது வளர்ந்து கொண்டிருக்கும் உடலுக்கும் மூளைக்கும் சக்தியை வழங்குகிறது. காலை உணவைத் தவிர்ப்பது குழந்தைகளை சோர்வாக, சினமாக மற்றும் வகுப்பில் கவனம் செலுத்த முடியாதவர்களாக மாற்றக்கூடும்.
இந்த இரண்டு நிமிட வாசிப்பில், காலை உணவின் அவசியத்தையும் ஆரோக்கியமான விருப்பங்களையும் அறிந்துகொள்ளுங்கள்.
குழந்தைகளுக்கு காலை உணவு ஏன் அவசியம்?
குழந்தைகள் வளர்கிறார்கள், விளையாடுகிறார்கள், கற்கிறார்கள், உடலுக்குத் தேவையான சக்தியைத் தொடர்ந்து சேமித்து வருகின்றனர். இரவு முழுவதும் உறங்கிய பின், வயிறு காலியாகிவிடும். மறுநாளைத் தொடங்க சரியான ஊட்டச்சத்து தேவையாகும்.
காலை உணவை உட்கொள்ளும் குழந்தைகள்:
- நினைவாற்றல், கவனிக்கும் கால அளவு மற்றும் பிரச்சினை தீர்க்கும் திறனில் முன்னேற்றம் அடைகிறார்கள்.
- வகுப்பில் சுறுசுறுப்பாகவும் கவனமாகவும் இருப்பார்கள்.
- மனநிலையும் நடத்தையும் மேம்படும்.
- செரிமானம் மற்றும் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.
காலை உணவைத் தவிர்க்கக்கூடாது என்பதற்கான 5 காரணங்கள்
-
மூளைச் செயல்பாட்டை மேம்படுத்துகிறது
சத்தான காலை உணவு குழந்தைகளின் கவனத்தையும் நினைவாற்றலையும் அதிகரிக்கிறது. இது அவர்களை சோர்வின்றி நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.
-
உடல் நலனை மேம்படுத்துகிறது
காலை உணவை தவிர்ப்பது பின்னர் அதிகம் சாப்பிடவும், ஆரோக்கியமற்ற உணவுகளைத் தேர்ந்தெடுக்கவும் வழிவகுக்கும். சீரான காலை உணவு உடல் எடையையும் உடல் நலத்தையும் சமநிலையில் வைக்கிறது.
-
மனநிலையை சமநிலைப்படுத்துகிறது
காலை உணவைத் தவிர்க்கும் குழந்தைகள் எரிச்சலாகவும் ஆர்வமின்மையுடனும் இருப்பார்கள். காலை உணவு மனநிலையை மேம்படுத்தி, கல்வித் திறனை அதிகரிக்கிறது.
-
ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது
காலை உணவு குழந்தைகளின் வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின்கள், கனிமங்கள், புரதம் மற்றும் ஆற்றலை வழங்குகிறது. மில்லெட் இட்லி, ராகி தோசை, பழங்களும் நட்ஸும் கலந்த ஓட்ஸ், முட்டை டோஸ்ட் போன்றவை சிறந்த காலை உணவுகளாகும்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான காலை உணவுகள்
- காய்கறி உப்புமா / அவல் உப்புமா: நார்ச்சத்து மற்றும் ஆற்றல் நிறைந்த பாரம்பரிய உணவு.
- முட்டை: புரதமும் மூளை வளர்ச்சிக்கான சத்துக்களும் நிறைந்த முட்டையை வேக வைத்து, ஆம்லெட் செய்து அல்லது காய்கறிகளுடன் சேர்த்து சமைத்து தரலாம்.
- முழு கோதுமை டோஸ்ட்: பீனட் பட்டர் மற்றும் வாழைப்பழத்துடன், சேர்த்து சாப்பிடுவது மாவுச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புச்சத்து ஆகியவற்றை வழங்கும்.
- இட்லி அல்லது தோசை சாம்பாருடன்/சட்னியுடன்: கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் ப்ரோபயாட்டிக்ஸ் நிறைந்த பாரம்பரிய காலை உணவு.
- ஸ்மூத்தி: பால் அல்லது தயிருடன் பழங்கள், ஓட்ஸ், நட்டுகள் சேர்த்து பிளெண்டு செய்தால், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த எளிய காலை உணவு தயார்.
முடிவுரை
காலை உணவு அதிக செலவானதாகவோ அல்லது நேரம் பிடிப்பதாகவோ இருக்க வேண்டியதில்லை. முந்தைய இரவு திட்டமிடுவதால் காலை நேரத்தை அமைதியாகவும் குறைந்த மன அழுத்தத்துடனும் தொடங்கலாம். இது குழந்தைகளுக்கு நாள் முழுவதும் கவனமாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்க தேவையான ஆற்றலையும் சத்தையும் அளிக்கும்.
பொறுப்புத் துறப்பு:
உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.