உங்கள் நண்பர்களோ குடும்ப உறுப்பினர்களோ உங்கள் கையைப் பிடிக்கும்போது, உங்கள் கை மிகவும் சூடாக இருப்பதாகக் கூறியிருக்கிறார்களா? அவர்கள் உங்கள் உடல் சூட்டைதான் சொல்கிறார்கள். பலருக்கு கொளுத்தும் வெயிலானாலும், குளிரானாலும் உடல் எப்போதும் சூடாக இருக்கும்.

மனித உடலின் இயல்பான வெப்பநிலை 98.60 F அல்லது 370 C ஆகும். இருப்பினும், சில வெளிப்புற சுற்றுச்சூழல் காரணிகள், முறையற்ற உணவு, சுகாதார நடைமுறைகள் மற்றும் உடல்நல பிரச்சினைகள் காரணமாக, ஒருவரின் உடல் அதிக வெப்பத்தை உறிஞ்சுவதால், உடல் சூடு அதிகரிக்கும், இது வெப்ப அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது.

போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதால் ஏற்படும் நீரிழப்பு, வேலை காரணமாக அல்லது வேறு காரணங்களால் சரியான காற்றோட்டம் இல்லாத குளிரூட்டப்பட்ட சுற்றுப்புறங்களில் நீண்ட நேரம் செலவழித்தல் மற்றும் நேரடி சூரிய ஒளியில் நீண்ட நேரம், அதுவும் மதியநேரம் இருத்தல் ஆகியவை வெப்ப அழுத்தத்திற்கு மிகவும் பொதுவான காரணங்களாகும். மேலும், மிகவும் காரமான உணவுகளை சாப்பிடுவது, உடற்பயிற்சிக்குப் பிறகு உடனடியாக குளிக்காமல் இருப்பது மற்றும் ஹைப்பர் தைராய்டிசம், ஆர்த்ரைட்டிஸ் போன்ற கோளாறுகளால் பாதிக்கப்படுவதும் உடல் சூட்டிற்குக் காரணமாகிறது.
reduce body heat

சோர்வு, தலைச்சுற்றல், குமட்டல் மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுப்பதால், வெப்ப அழுத்தமானது அன்றாடச் செயல்பாடுகளைச் செய்வதற்கான உங்கள் திறனில் அடிக்கடி குறுக்கிடுகிறது. சில சந்தர்ப்பங்களில், இது தசைப்பிடிப்பு, கடுமையான சோர்வு மற்றும் இதய பிரச்சினைகளின் கடுமையான அறிகுறிகளையும் ஏற்படுத்தும். இத்தகைய கடுமையான நிகழ்வுகளில், உடல் சூட்டை சாதாரண வரம்பிற்குக் கொண்டு வர, உடனடி நடவடிக்கைகளை எடுக்கவும், உடனடி மருத்துவ சிகிச்சையைப் பெறவும் அறிவுறுத்தப்படுகிறது.

மறுபுறம், உங்கள் உடல் வெப்பம் அதிகரிக்கும்போது, உங்கள் உடலில் உள்ள வெப்பத்தைக் குறைப்பதற்கும், உங்கள் உடலைக் குளிர்ச்சியாக்குவதற்கும் சில எளிய, மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியங்களை நீங்கள் பின்பற்றலாம்.

வெப்ப அழுத்தத்தின் போது உங்கள் உடலைக் குளிர்விக்க வீட்டு வைத்தியம்:

இளநீர்:

இந்த இயற்கை பானம் உங்கள் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது. மேலும், இது உடலின் வெப்பம், வியர்வை மற்றும் மன அழுத்தத்தின்போது இழக்கப்படும் அத்தியாவசிய வைட்டமின்கள், இம்மியப் பொருட்கள் (ட்ரேஸ் மினரல்கள்) மற்றும் எலக்ட்ரோலைட்டுகளை உடலுக்கு அளிக்கிறது. ஒரு கிளாஸ் இளநீர் உள் உறுப்புகளுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும். அதிலும் குறிப்பாக கோடைக் காலங்களில் ஆற்றலைத் தரும்.

கற்றாழை ஜெல்

குளித்த பிறகு, கற்றாழைச் செடியிலிருந்து எடுக்கப்பட்ட ஜெல்லைப் பூசுவதால், உடல் சூட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் திசுக்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கிறது. கற்றாழையின் உள் அடுக்குகளில் முக்கியமாக நீர், சில முக்கிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன, அவை சருமத்தின் ஆழமான அடுக்குகளையும் சரிசெய்கின்றன.

புதினா இலைகள்

புதினாவில் உள்ள மெந்தால் உடலின் அணுக்களில் குளிர்ச்சியான விளைவை உருவாக்கி, அதிகரித்த உடல் வெப்பநிலையைக் குறைக்க உதவுகிறது. ஒரு கப் சூடான தேநீர் அல்லது குளிர்ந்த எலுமிச்சை ஜூஸைப் பருகும்போது சிறிது புதினா இலைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள், உங்கள் உடலில் உடனடியாகக் குளிர்ச்சியான உணர்வு ஏற்படலாம்.

மோர்

குளிர்ச்சி தரும் உணவுகளில் முதலிடத்தில் இருப்பது மோர். இதில் ப்ரோபயாட்டிக்குகள் நிரம்பியுள்ளன, இது வயிற்று சூட்டைத் தணித்து செரிமானத்தைத் தூண்டுகிறது. வெப்ப அழுத்த சூழ்நிலைகளில் உங்கள் உடல் சூட்டைத் தணிக்க மோரில் சிறிது கொத்துமல்லி இலைகளைச் சேர்த்து அருந்துங்கள்.

குளிர்ந்த நீரில் குளித்தல்

நீங்கள் வேலை அல்லது ஜிம்மில் இருந்து வீடு திரும்பியவுடன், குளிர்ந்த நீரில் குளிக்கவும். இது உடலில் வெப்பம் அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கும் வியர்வையை அகற்ற உதவுகிறது. மேலும், ஐஸ் கட்டிகள் நிரப்பப்பட்ட குளிர்ந்த நீரில் பத்து நிமிடங்களுக்கு உங்கள் கால்களை வைத்திருந்தால் உடல் சூடு குறையும்.

நீர்ச்சத்து உணவு

வெப்ப அழுத்தத்திலிருந்து உங்கள் உடல் அணுக்களைப் பாதுகாக்க, உங்கள் காலை உணவில் தர்பூசணி, மாதுளை மற்றும் ஸ்ட்ராபெரி போன்ற உடலுக்குக் குளிர்ச்சிதரும் பழங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். மதிய உணவு மற்றும் இரவு உணவில், காய்கறி சாலட்களையும், தயிரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அவை உங்களின் மிகையான உடல் சூட்டைத் தணிப்பதுடன் உள் உறுப்புகளை அமைதிப்படுத்த தேவையான அழற்சி எதிர்ப்புத் தன்மையையும் கொண்டுள்ளன.

உடற்பயிற்சி

எளிமையான மூச்சு பயிற்சிகளைச் செய்வது உங்கள் உடலில் வியர்வையைக் கட்டுப்படுத்தவும், உங்கள் உடல் சூட்டைத் திறம்பட குறைக்கவும் உதவும் என்பது அனைவரும் அறிந்ததே! மேலும், ஒவ்வொரு நாளும் பதினைந்து நிமிடங்கள் தியானமும் யோகாவும் செய்வதால் உங்கள் உடல் அணுக்கள் மற்றும் நரம்புகளில் சூடு தணிவதுடன் உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்.

உடல் சூட்டைக் குறைப்பதற்கான பயனுள்ள குறிப்புகள்:

வசதியான ஆடைகளை அணியுங்கள்

நீங்கள் பயணம் செய்யும்போது, மும்முரமாக வேலை செய்யும்போது அல்லது வீட்டில் இருக்கும்போது இறுக்கமான ஆடைகளை அணிவது, உடல் திசுக்களில் அதிகப்படியான வெப்பத்தை உருவாக்கும். உடல்சூட்டைக் குறைக்க கைத்தறி மற்றும் பருத்தி ஆடைகளை அணியுங்கள், இறுக்கமான டெனிம் ஜீன்ஸ், செயற்கை நைலான் அல்லது ரேயான் ஆடைகளை அணிவதைத் தவிர்த்திடுங்கள்.

குளிர்நீர் ஒத்தடம் கொடுங்கள்

கால்கள், கால்விரல்கள், விரல்கள் மற்றும் கைகள் ஆகியவை வெப்பநிலை மாறும்போது அதிக உணர்திறனைக் கொண்டிருக்கும். இவற்றுடன் சருமத்தின் வெளிப்புறத்திற்கு அருகே நரம்புகள் ஓடும் கழுத்து, மணிக்கட்டு, மார்பு, முகம், மற்றும் நெற்றி போன்ற சில அழுத்தப் புள்ளிகளிலும் அதிக உணர்திறன் இருக்கும். அவற்றை குளிர்ந்த நீரில் வைப்பது அல்லது ஐஸ் கட்டியை வைப்பது குளிர்ச்சியைத் தூண்டுகிறது, வெப்ப அழுத்தத்தைக் குறைக்கிறது.

ஐஸ் டீயைப் பருகுங்கள்

வெளியில் நீண்டநேரம் செலவிட்ட பிறகு, குறிப்பாக நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருந்த பிறகு, ​​உடலில் அதிகளவு வெப்பம் உருவாவதுடன் உடல் சோர்வடைந்தும் இருக்கும். ஒரு கிளாஸ் ஐஸ் டீயில் சிறிது எலுமிச்சையையும் தேனையும் கலந்து குடிப்பதால், உடல்சூடு குறைவதோடு உடலுக்கு உடனடியாக புத்துணர்ச்சி கிடைக்கும், மனமும் உற்சாகம் அடையும்.

சீதாலி யோகா/ குளிர்ச்சியான சுவாசம்

இந்த மூச்சுப் பயிற்சி உடலைக் குளிர்விக்கவும், உடலுக்கு நீர்ச்சத்தை அளிக்கவும், பித்த சமநிலையின்மையை சரிசெய்யவும் உதவுகிறது. நீங்கள் உங்கள் நாக்கின் ஓரங்களைச் சுருட்டி வாய் வழியாக சுவாசிக்க வேண்டும். மூன்று நிமிட சீதாலி மூச்சுப் பயிற்சியில் தொடங்கி, பின்னர் சாதாரணமாக சுவாசித்து, பிறகு மீண்டும் மூன்று நிமிடங்கள் சீதாலி மூச்சுப் பயிற்சியைச் செய்யுங்கள். முதலில் தினமும் 10 நிமிடங்கள் பயிற்சி செய்யுங்கள், பிறகு படிப்படியாக நேரத்தை அதிகப்படுத்துங்கள். இந்த மூச்சுப் பயிற்சி உடலையும் மனதையும் குளிர்வித்து, பித்த தோஷத்தைக் குறைக்கும்.

இந்த மூச்சுப் பயிற்சியை எப்படி செய்வது?

அமைதியான இடத்தில் வசதியாக அமர்ந்து கொள்ளுங்கள்.

நாக்கை வெளியே இழுத்து, ஓரங்களை உருட்டுங்கள். உங்கள் நாக்கை உருட்டுவது கடினமாக இருந்தால், உங்கள் உதடுகளைப் பயன்படுத்தலாம்.

வாய் வழியாக மெதுவாக காற்றை உள்ளிழுக்கவும்.

மூக்கு வழியாக மூச்சை வெளியேற்றவும்.

இவ்வாறு 5 நிமிடங்கள் செய்யுங்கள். இதனைத் தொடர்ந்து 2-3 முறை செய்யுங்கள்.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எனது உடல் சூட்டை எப்படி குறைப்பது?

லேசான அறிகுறிகள் இருந்தால் அதிகமாகத் தண்ணீர் குடியுங்கள், கடுமையான செயல்பாடுகளைத் தவிர்த்திடுங்கள். ஏனெனில் இது ஹீட் ஸ்ட்ரோக்கை ஏற்படுத்தும். அறிகுறிகள் குறையவில்லை என்றால், மருத்துவ உதவியை நாடுங்கள்.

எந்தெந்த உணவுகள் உங்கள் உடலை குளிர்விக்கும்?

உடல் சூட்டைத் தணிக்க தண்ணீர் ஒரு சிறந்த மருந்தாகும். நேரடி சூரிய ஒளியைத் தவிர்ப்பது மற்றும் சமச்சீர் உணவை உண்பது ஆகியவை இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும், வியர்வையினால் உடலில் இருக்கும் தேவையான உப்புகளும் தாதுக்களும் வெளியேறும், இதனைத் தடுக்க சமச்சீர் உணவை உண்ண வேண்டும்.

நான் ஏன் அதிக உடல் சூட்டை உணர்கிறேன்?

நேரடி சூரிய ஒளி, கடுமையான உடலுழைப்பு, மறைந்திருக்கும் உடல்நல பிரச்சினைகள் அல்லது ஹார்மோன் மாற்றங்கள் ஆகியவை உடலில் வெப்ப அறிகுறிகள் ஏற்பட தொடங்குவதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

உடல் சூட்டை எப்படி நிறுத்துவது?

திரவப்பொருட்களை அதிகமாகக் குடிப்பது, உடலில் நீர்ச்சத்தைத் தக்கவைப்பது மற்றும் கோடையில் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் உணவுகளை உண்பது ஆகியவை வெப்பம் தொடர்பாக உடலில் ஏற்படும் நோய்களைத் தவிர்க்க சிறந்த வழியாகும்.

உடல் சூட்டை குறைக்க என்ன டிப்ஸ்?

தளர்வான ஆடைகளை அணிவது, உடலில் நீர்ச்சத்தைத் தக்கவைப்பது மற்றும் வெப்பத்தைத் தூண்டாத உணவை உண்பது மற்றும் கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருப்பது உடல் சூட்டைக் குறைக்க உதவும். மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள், சுயமாக மருந்து எடுத்துக்கொள்ளாதீர்கள்.

முடிவு:

மேற்கூறிய அடிப்படை பராமரிப்பு குறிப்புகள் அதிக வெப்பநிலையில் உங்கள் உடல் அணுக்களைக் குளிர்விக்கும், உங்கள் வியர்வையின் அளவைக் கண்காணித்து, அதிகப்படியான அத்தியாவசிய திரவங்கள் இழக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும், எனவே உங்களுக்குச் சோர்வு அல்லது மயக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்.

இருப்பினும், உடல் சூட்டைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்த பிறகும் உங்கள் உடல் வெப்பநிலை நீண்ட காலமாக குறையவில்லை என்று நீங்கள் உணர்ந்தால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகுங்கள், குறிப்பாக நீங்கள் 65 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால், 5 வயதுக்கு கீழ் இருந்தால் அல்லது ஏதேனும் நோய் இருந்தால் மருத்துவ உதவியைப் பெற வேண்டும்.

ஆதாரம்:

https://www.ncbi.nlm.nih.gov/books/NBK459311/

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC6977599/

பொறுப்புத் துறப்பு:

உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.