சமீபகாலமாக டெங்கு காய்ச்சல் உலகளவில் மனிதர்களுக்கு மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளது. டெங்கு காய்ச்சல், டெங்கு வைரஸால் (DENV) ஏற்படும் ஒரு வகை வைரஸ் நோயாகும். இது கொசுக்களினால் பரவுகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) டெங்குவை மிகவும் அதிகமாகப் பரவும் வைரஸ் தொற்று என்று அடையாளம் கண்டுள்ளது, இது டெங்கு வைரஸால் பாதிக்கப்பட்ட பெண் ஏடிஸ் இன கொசுக்கள் கடிப்பதன் மூலம் பரவுகிறது. இது பிளேட்லெட் அளவைக் குறைத்து இரத்த நாளங்களை சேதப்படுத்தும். டெங்கு காய்ச்சலில் பல வகைகள் உள்ளன, உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், உயிருக்கு ஆபத்தாகிவிடும்.
பாதிக்கப்பட்ட நபருக்கு ஏடிஸ் கொசு கடித்த சில நாட்களுக்குள் மூட்டு மற்றும் தசை வலி, அதிக உடல் சூடு, தலைவலி மற்றும் சினப்பு போன்றவை ஏற்படலாம். ஒரு கட்டத்தில் அறிகுறிகள் மோசமடையலாம், ஆனால் லேசான வகை டெங்கு காய்ச்சல் பொதுவாக ஒரு வாரத்தில் சரியாகிவிடும்.
டெங்கு வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது அவசியம். இந்த வைரஸ் காய்ச்சலுக்குக் குறிப்பிட்ட சிகிச்சை இல்லை என்றாலும் ஆரோக்கியமான, சமச்சீரான, ஊட்டச்சத்துமிக்க உணவை உண்பதால் நோயிலிருந்து வேகமாக மீளலாம். மேலும், இது நீங்கள் மீண்டும் ஆரோக்கியமான நிலையை அடைவதற்கான முக்கியமான படியாகும்.
டெங்கு காய்ச்சலின் போது சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி மேலும் அறிய இந்தக் கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.
உணவுசார்ந்த வழிகாட்டுதல்கள்
குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை, கடுமையான பலவீனம் மற்றும் நீரிழப்பு ஆகியவை டெங்கு காய்ச்சலால் ஏற்படக்கூடிய சாத்தியமான விளைவுகளாகும். மேலும், அதைத் தவிர்க்க உணவு முறையை கவனமாகத் திட்டமிட வேண்டும். நோயாளிகள் விரைவாக குணமடைய நன்கு திட்டமிடப்பட்ட உணவு அவசியம்.
நீர்ச்சத்து
டெங்கு காய்ச்சல் நீரிழப்பை ஏற்படுத்தலாம். இந்த நீரிழப்பைத் தடுக்க நீர்ச்சத்தைப் பராமரிப்பது அவசியம், முக்கியமாக உங்களுக்கு வாந்தி அல்லது வயிற்றுப்போக்கு இருந்தால் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும். தண்ணீர், தெளிவான சூப், இளநீர் மற்றும் எலக்ட்ரோலைட் பானங்கள் ஆகியவை திரவ சமமின்மையைச் சரிசெய்ய உதவும். இருப்பினும், சர்க்கரை கலந்த பானங்களைத் தவிர்க்கவும், இது மேலும் நீரிழப்புக்கு வழிவகுக்கும்.
கொஞ்சமாக அடிக்கடி உண்ணுங்கள்
அதிக உணவை சாப்பிடுவதைவிட சிறிய அளவில் அடிக்கடி சாப்பிடுவது நல்லது. இரைப்பை குடல் அமைப்பில் அதிகப்படியான அழுத்தத்தை ஏற்படுத்தாமல், உங்கள் உடலுக்குச் சரியான அளவு ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதை உறுதிசெய்ய இது உதவும்.
ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்
உணவில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவுகளைச் சேர்ப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டலாம். பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்கள் அனைத்தும் முக்கிய ஊட்டச்சத்துகள் நிரம்பிய உணவுகளாகும்.
அதிகக் கொழுப்பு மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளைக் குறைவாக சாப்பிடுங்கள்
கொழுப்பு அல்லது நார்ச்சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது சிறந்தது. இந்த உணவுகள் ஜீரணிக்க கடினமாக இருக்கும் மற்றும் செரிமான அமைப்பில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும்.
டெங்கு காய்ச்சலின்போது சாப்பிட வேண்டியவை மற்றும் குடிக்க வேண்டியவை
வைட்டமின் C உணவுகள்
டெங்குவின் போது உங்கள் உணவில் இருக்க வேண்டிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களில் ஒன்று, வைட்டமின் சி. சக்திவாய்ந்த ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டிஆக்ஸிடேட்டிவ் பண்புகளுடன் கூடிய வைட்டமின் C, வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்க உதவுகிறது. மேலும், இது குடலில் இருந்து இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. நீங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டிய வைட்டமின் சி நிறைந்த உணவுகளில் சில ஆரஞ்சு, எலுமிச்சை, பப்பாளி, கொய்யா போன்ற பழங்கள், கீரைகள், குடைமிளகாய், முட்டைகோசு, ப்ரோக்கோலி போன்ற காய்கறிகள் ஆகியவையாகும்.
பப்பாளி சாறில் பப்பேன் மற்றும் சைமோபாபைன் போன்ற செரிமான நொதிகள் உள்ளன. இந்த நொதிகள் செரிமானத்தைத் தூண்டவும், வயிறு உப்பிசத்தைக் குறைக்கவும் மற்றும் பிற செரிமான பிரச்சனைகளைத் தீர்க்கவும் உதவுகின்றன. மேலும், பப்பாளி இலை சாறு பிளேட்லெட் எண்ணிக்கையை மேம்படுத்துவதன் மூலம் டெங்குவிற்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.
இரும்புச்சத்து நிறைந்த உணவுகளைச் சேர்த்திடுங்கள்
டெங்கு காய்ச்சலின் போது பிளேட்லெட் எண்ணிக்கை குறையும். உங்கள் இரத்த ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கவும், பிளேட்லெட்டுகளை உற்பத்தி செய்யவும் உங்கள் உடலுக்கு அதிக அளவு இரும்புச்சத்து தேவைப்படுகிறது. உடலின் இரத்த உறைவு செயல்பாட்டிற்குப் பிளேட்லெட்டுகள் இன்றியமையாதவை. எனவே, டெங்கு காய்ச்சலின் போது பொதுவாக ஏற்படும் இரத்த இழப்பைத் தடுப்பது முக்கியம். எனவே, இரும்புச்சத்து நிறைந்த உணவுகளான கொழுப்பு நீக்கிய இறைச்சி, பயிறு மற்றும் பருப்பு வகைகள், கீரைகள் மற்றும் பேரீச்சம்பழம் போன்றவற்றை உட்கொள்வது இரும்புச்சத்தை வழங்க உதவும். இது பிளேட்லெட் எண்ணிக்கையை அதிகரிக்கவும், விரைவாக நோயிலிருந்து மீள்வதற்கும் உதவும்.
வைட்டமின் K உணவுகளை உண்ணுங்கள்
வைட்டமின் K மற்றொரு அத்தியாவசிய ஊட்டச்சத்து ஆகும், இது பிளேட்லெட் எண்ணிக்கையை மேம்படுத்த உதவுகிறது. மேலும், இது இரத்த உறைதலுக்கும் டெங்கு காய்ச்சலை நிர்வகிப்பதற்கும் உதவுகிறது. முளைக்கட்டிய பயிறுகள், ப்ரோக்கோலி, கோசு, கீரை, முட்டைக்கோசு, கிவி, வெண்ணெய், மற்றும் கொழுப்பு நீக்கிய இறைச்சி போன்ற வைட்டமின் K நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதால் டெங்கு காய்ச்சல் தாக்கத்திலிருந்து மீளலாம்.
அதிக கலோரி உணவுகள்
டெங்கு வைரஸால் பாதிக்கப்படும்போது உங்கள் உடல் பலவீனமடைந்து சோர்வடைகிறது. அரிசி, பால் மற்றும் உருளைக்கிழங்கு போன்ற ஆற்றல் தரும் உணவுகளை நிறைய சேர்த்துக் கொள்ளுங்கள், அவை இழந்த வலிமையை மீண்டும் பெறவும், குணமடையவும் உதவும்.
போதுமான திரவங்கள்
குறிப்பாக நீங்கள் டெங்கு காய்ச்சலில் இருந்து மீண்டு வரும்போது, தண்ணீர் உங்கள் உடலுக்கு இன்றியமையாததாக ஆகிறது. எலெக்ட்ரோலைட்டுகள் (பொட்டாசியம், கால்சியம், சோடியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை) நிரம்பியிருப்பதால் தண்ணீர், இளநீர், தெளிந்த சூப் மற்றும் அரிசிக் கஞ்சி உள்ளிட்ட ஏராளமான திரவங்களை குடித்திடுங்கள். திரவங்கள் உங்கள் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிப்பதுடன் உங்களுக்கு நீர்ச்சத்தையும் அளிக்கும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்
கேஃபின்
கேஃபின் ஒரு டையூரிடிக் ஆகும், இது சிறுநீர் வழியாக தண்ணீரை இழக்கச் செய்கிறது. எனவே, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் போது, கேஃபின் கலந்த பானங்களை அருந்துவதைக் கட்டுப்படுத்துவது அவசியம், ஏனெனில் உடலில் நீர்ச்சத்து இருக்க வேண்டும்.
காரமான உணவுகள்
காரமான உணவுகள் அதிகப்படியான அமில சுரப்பினால் வயிற்றில் எரிச்சலை ஏற்படுத்தும் மற்றும் குடலை சேதப்படுத்தும். மென்மையான மற்றும் காரமில்லா உணவை உண்பது நல்லது.
கொழுப்பு உணவுகள்
டெங்கு காய்ச்சல் இருக்கும்போது பொதுவாக உணவு செரிமானம் மெதுவாகதான் நடைபெறும், இதனால் கொழுப்பு நிறைந்த உணவுகள் செரிமானம் ஆகாது. எனவே, கொழுப்பு நிறைந்த இறைச்சித் துண்டுகள், வெண்ணெய் மற்றும் எண்ணெயில் பொறித்த உணவுகள் போன்ற உணவுகளைத் தவிர்ப்பது அவசியம். இது உங்கள் குடலில் அழுத்தத்தைக் குறைத்து, அந்த ஆற்றலைப் பயன்படுத்தி மீண்டும் வலிமையைப் பெற உதவும்.
பொறுப்புத் துறப்பு:
உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.