நம்முடைய உணவுப் பழக்கங்கள் நமது ஆரோக்கியத்திலும் நல்வாழ்விலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவை நோய்களின் அபாயத்தைக் கட்டுப்படுத்துவதோடு, பல மருத்துவப் பலன்களையும் அளிக்கின்றன. மருந்துகளுக்கு உணவு ஒரு மாற்று இல்லை என்றாலும், பல நோய்களைக் குணப்படுத்துவதில் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. நாம் உண்ணும் உணவு நமது ஒட்டுமொத்த உடல்நலத்தில் ஆழமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
Food as medicine

ஆய்வுகளின்படி, உணவுப் பழக்கங்கள் சில உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. சில உணவுகள் நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கும் அதே வேளையில், மற்றவை நோய்களைத் தடுக்கும் மற்றும் குணப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளன. இந்தக் காரணத்தினால்தான், "உணவே மருந்து" என்று நம்மில் பலர் நம்புகிறோம்.

உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களின் மூலம் பல மருத்துவக் குறைபாடுகளைத் தடுக்கவும், குணப்படுத்தவும் முடியும். நீங்கள் உண்ணும் உணவு நோயை வளர்க்கலாம் அல்லது அதை எதிர்த்துப் போராடலாம்; இதுவே உணவின் மருத்துவ சக்தி. உணவுகளின் மருத்துவப் பலன்களைப் பற்றி மேலும் அறிய இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

நூற்றாண்டுகளுக்கு முன்பு, நவீன மருத்துவத்தின் தந்தை எனப் போற்றப்படும் ஹிப்போகிரேட்டஸ், "உணவே உன் மருந்தாக இருக்கட்டும், மருந்தே உன் உணவாக இருக்கட்டும்" என்று கூறினார். ஆயுர்வேதம், பாரம்பரிய சீன மருத்துவம் மற்றும் பழங்குடியினரின் குணப்படுத்தும் முறைகள் போன்ற பண்டைய மருத்துவ முறைகள், உணவை எப்போதும் நோயைத் தீர்க்கும் மூலமாக அங்கீகரித்துள்ளன. இன்று, மருத்துவ நிபுணர்களும் ஆராய்ச்சியாளர்களும், நாள்பட்ட நோய்களைத் தடுப்பதிலும், அவற்றை குணப்படுத்துவதிலும் நல்ல ஊட்டச்சத்து ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது என்று கூறுகின்றனர்.

உணவு உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கிறது?

உங்கள் உடல் பல டிரில்லியன் செல்களால் ஆனது. பழுதுபார்த்தல், தொற்றுகளை எதிர்த்துப் போராடுதல், ஆற்றலை உருவாக்குதல் போன்ற செல்களின் அனைத்து செயல்பாடுகளும் நீங்கள் அவற்றுக்கு அளிக்கும் உணவையே சார்ந்துள்ளன. வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை செல்களுக்குத் தேவையான மூலப்பொருட்களாக செயல்படுகின்றன. மறுபுறம், ஆரோக்கியமற்ற மற்றும் துரித உணவுகள் உடலின் சமநிலையைச் சீர்குலைத்து, அழற்சியை ஏற்படுத்துகின்றன.

சரியான ஆரோக்கியமான உணவுகள் உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும், ஹார்மோன்களைச் சீராக்கும் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

மருந்தாகச் செயல்படும் உணவுகள்

  1. அழற்சிக்கு மஞ்சள்

இந்திய சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படும் மஞ்சளில், குர்குமின் என்ற சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு வேதிப்பொருள் உள்ளது. இதைத் தவறாமல் உட்கொள்ளும்போது, கீல்வாதம், சருமப் பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றைத் தீர்க்க உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

  1. நோய் எதிர்ப்பு சக்திக்கும் இதய ஆரோக்கியத்திற்கும் பூண்டு

பூண்டு சமையலறையில் ஒரு வாசனைப் பொருள் மட்டுமல்ல. அதன் இயற்கையான கந்தகச் சேர்மங்கள் காரணமாக, இது உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது, இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது மற்றும் கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது.

  1. நச்சு நீக்கத்திற்கும் ஆற்றலுக்கும் கீரை வகைகள்

பசலைக்கீரை, பரட்டைக்கீரை  மற்றும் பிற கீரை வகைகளில் ஃபோலேட், இரும்புச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை கல்லீரலைச் சுத்தம் செய்கின்றன, உடலுக்கு ஆற்றலை அளிக்கின்றன மற்றும் செல் சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.

  1. மூளை ஆரோக்கியத்திற்கு பெர்ரி வகைகள்

புளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பழங்களில் ஃப்ளாவனாய்டுகள் மற்றும் ஆந்தோசயனின்கள் நிறைந்துள்ளன. இவை நினைவாற்றலை மேம்படுத்துகின்றன, ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தைக் குறைக்கின்றன மற்றும் அறிவாற்றல் வீழ்ச்சியைத் தாமதப்படுத்துகின்றன.

  1. குடல் ஆரோக்கியத்திற்கு தயிர் மற்றும் புளித்த உணவுகள்

உங்கள் குடலில் டிரில்லியன் கணக்கான பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. அவை செரிமானம் முதல் மனநிலை வரை அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தயிர், கிம்ச்சி மற்றும் கேஃபிர் போன்ற புளித்த உணவுகள் உங்கள் குடல் நுண்ணுயிரிகளின் சமநிலையை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.

  1. இதய ஆரோக்கியத்திற்கு நட்ஸ் மற்றும் விதைகள்

பாதாம், வால்நட்கள், ஆளி விதைகள் மற்றும் சியா விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 உள்ளன. இவை இதய ஆரோக்கியத்தை ஆதரித்து, ஹார்மோன் சமநிலையைப் பராமரிக்கின்றன.

உணவும் நாள்பட்ட நோய்களும்

  • முழு தானியங்கள், பருப்பு வகைகள், நார்ச்சத்து நிறைந்த மற்றும் சர்க்கரை குறைவாக உள்ள உணவுகள் இரத்த சர்க்கரையை இயற்கையாகவே சீராக்க உதவுகின்றன.
  • உப்பு உட்கொள்ளலைக் குறைத்து, வாழைப்பழம் மற்றும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்ற பொட்டாசியம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.
  • ஓட்ஸ், பருப்பு வகைகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் LDL (கெட்ட கொலஸ்ட்ரால்) அளவைக் குறைத்து, கொழுப்புச் சத்து விகிதத்தைப் பராமரிக்கின்றன.
  • ஒமேகா-3, மெக்னீசியம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகள் மனநிலை மற்றும் மன ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
  • ப்ரக்கோலி மற்றும் முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளில் உள்ள சக்திவாய்ந்த தாவரச் சேர்மங்கள், புற்றுநோயை உண்டாக்கும் நச்சுக்களை அகற்ற உதவுகின்றன.

உணவின் மூலம் குணமடைவது என்பது நீங்கள் கடுமையான உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்ற வேண்டும் அல்லது உங்களுக்குப் பிடித்த உணவுகளை ஒருபோதும் சாப்பிடக்கூடாது என்று அர்த்தமல்ல. இது உங்கள் உடலைக் கவனித்து, கவனத்துடன் உண்பதைப் பற்றியது.

  • உங்கள் உணவில் முழுமையான, புதிய உணவுகளை நிறையச் சேர்க்கவும்.
  • வண்ணம், வகை மற்றும் சுவையுடன் சமைக்கவும்.
  • எந்த உணவுகள் உங்களை ஆற்றலுடன் உணரவைக்கின்றன அல்லது மந்தமாக்குகின்றன அல்லது வயிறு உப்புசமாக உணரவைக்கின்றன என்பதைக் கவனியுங்கள்.

உணவை மருந்தாகப் பயன்படுத்த தொடங்குவதற்கான நடைமுறை வழிகள்

  • உங்கள் நாளை நார்ச்சத்து அல்லது புரதம் நிறைந்த காலை உணவுகளான ஓட்ஸ், ஸ்மூத்திகள் அல்லது காய்கறிகளுடன் கூடிய முட்டையுடன் தொடங்குங்கள். இது நாள் முழுவதும் உங்களை ஆற்றலுடனும் நிறைவாகவும் வைத்திருக்கும்.
  • வானவில்லின் வண்ணங்களில் சாப்பிடுங்கள். அதாவது, உங்கள் தட்டில் பல வண்ணக் காய்கறிகளையும் பழங்களையும் சேர்ப்பதன் மூலம், உங்களுக்கு அதிக ஃபைட்டோநியூட்ரியண்ட்கள் கிடைக்கும்.
  • உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க, நிறையத் தண்ணீர் குடியுங்கள். மூலிகைகள், எலுமிச்சை அல்லது வெள்ளரிக்காய் கலந்த நீரையும் பருகலாம்.
  • இஞ்சி, மஞ்சள், இலவங்கப்பட்டை, துளசி மற்றும் சீரகம் போன்ற மூலிகைகளையும் மசாலாப் பொருட்களையும் சுவைக்காகப் பயன்படுத்துங்கள்; இவற்றில் சக்திவாய்ந்த மருத்துவ குணங்களும் உள்ளன.
  • பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறைத்துக் கொள்ளுங்கள். அவை அலமாரியில் அதிக நாட்கள் இருப்பதற்காகத் தயாரிக்கப்படுகின்றன, உங்கள் ஆயுளை அதிகரிக்க அல்ல.

முடிவுரை

நீங்கள் ஒரே இரவில் உங்கள் வாழ்க்கையை மாற்ற வேண்டியதில்லை. மெதுவாகத் தொடங்குங்கள். உங்கள் சமையலறையை உங்கள் ஆரோக்கிய மையமாக மாற்றுங்கள். உணவு உங்களுக்கு ஆறுதலாகவும், மகிழ்ச்சியாகவும், நோய் தீர்க்கும் மருந்தாகவும் இருக்கட்டும். ஏனென்றால், நீங்கள் உங்கள் உடலுக்குக் கவனத்துடன் ஊட்டமளிக்கும்போது, உணவு நீண்ட, வலுவான மற்றும் துடிப்பான வாழ்க்கையை வாழ்வதற்கான உங்கள் உற்ற துணையாக மாறுகிறது.

பொறுப்புத் துறப்பு

உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.