இரவில் திடீரென இருமல் வந்தால் வெறுப்பாக இருக்கும், தூக்கம் தடைப்படும். அது மட்டுமல்ல, இரவுநேர இருமல் சில உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம். இந்த இருமல் உங்கள் நாசி பாதையிலிருந்து தொண்டையின் பின்பகுதியில் சளி வடிவது (போஸ்ட் நேசல் ட்ரிப்) போன்ற பொதுவான பிரச்சினைகள் முதல், GERD மற்றும் இதய செயலிழப்பு வரை பல காரணங்களால் ஏற்படலாம். இரவுநேர இருமல் தொடர்ச்சியாக ஏற்பட்டால் அல்லது கடுமையாக இருந்தால், மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இரவில் இருமல் வருவதற்கான காரணத்தை உடனடியாகக் கண்டறிந்து, தகுந்த சிகிச்சையைப் பெற்றால் இருமலைக் கட்டுப்படுத்தலாம்.
இரவில் இருமல் வருவதற்கான காரணங்கள்:
போஸ்ட் நேசல் ட்ரிப்:
நாசி பாதையிலிருந்து தொண்டையின் பின்பகுதியில் சளி வடிவது போஸ்ட் நேசல் ட்ரிப் ஏற்படுகிறது. இது தொண்டையை எரிச்சலடையச் செய்து, இருமலை ஏற்படுத்தும். குறிப்பாக, படுத்திருக்கும்போது இருமல் அதிகமாகும். ஒவ்வாமை, ஜலதோஷம், சைனஸ் தொற்றுகள் அல்லது சுற்றுச்சூழல் மாசுப்படுத்திகள் ஆகியவை போஸ்ட் நேசல் ட்ரிப்பிற்கான பொதுவான காரணங்களாகும்.
GERD (இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய்):
GERD என்பது நாள்பட்ட செரிமானக் கோளாறு ஆகும். இதில் வயிற்றில் உள்ள அமிலம் உணவுக்குழாய்க்குத் திரும்புவதால், எரிச்சல் மற்றும் இரவுநேர இருமல் உட்பட பல்வேறு அறிகுறிகள் ஏற்படும். அமிலம் தொண்டையில் எரிச்சலை ஏற்படுத்தி, இருமலைத் தூண்டும். முக்கியமாக படுத்திருக்கும்போது அல்லது உடலை வளைக்கும்போது இருமல் அதிகமாகும்.
ஆஸ்துமா:
ஆஸ்துமா என்பது ஒரு நாள்பட்ட சுவாசக் கோளாறு ஆகும், இது மூச்சுக்குழாயில் அழற்சியை ஏற்படுத்தி, சுவாசப்பாதையை குறுகலாக்கும். இருமல் அதிலும் குறிப்பாக இரவுநேர இருமல், ஆஸ்துமா கட்டுப்பாட்டில் இல்லை என்பதைக் குறிக்கிறது. இது "இருமலை ஏற்படுத்தும் ஆஸ்துமா" என்றும் குறிப்பிடப்படுகிறது.
நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் (COPD):
COPD என்பது கடுமையான நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயாகும். இதில் பெரும்பாலும் மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் எம்பிஸிமா ஆகியவை சேர்ந்து ஏற்படும். COPD உள்ளவர்கள் அடிக்கடி இருமுவார்கள். இது சளி அதிகமாக உற்பத்தியாவதாலும், சுவாசிப்பதில் ஏற்படும் அசௌகரியம் காரணமாகவும் இரவில் மோசமடையலாம்.
இதய செயலிழப்பு:
இதய செயலிழப்பு என்பது இதயத்திற்கு இரத்தத்தைத் திறம்பட அனுப்ப இயலாமையைக் குறிக்கிறது. இது இறுதியில் நுரையீரலில் திரவத்தைத் திரள செய்து, இரவில் இருமலை ஏற்படுத்தும். இந்த இருமலுடன் மூச்சுத் திணறல் மற்றும் சோர்வு போன்ற பிற அறிகுறிகளும் ஏற்படலாம்.
மருந்துகள்:
உயர் இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சையளிப்பதற்கான ACE தடுப்பான்கள் போன்ற சில மருந்துகளை நீங்கள் எடுத்துக் கொண்டால், பக்கவிளைவாக இரவில் நாள்பட்ட இருமல் ஏற்படலாம். நீங்கள் உட்கொள்ளும் மருந்து உங்களுக்கு இரவுநேர இருமலை ஏற்படுத்துவதாக நீங்கள் சந்தேகித்தால், மாற்று விருப்பத்தேர்வுகளுக்கு உங்கள் மருத்துவரை அணுகவும்.
நோய்த்தொற்றுகள்:
நிமோனியா அல்லது மூச்சுக்குழாய் அழற்சி போன்ற சுவாச நோய்த்தொற்றுகள் இருமலை ஏற்படுத்தும், இதனால் இரவில் அதிகமாக இருமல் வரும். இருமலுடன் காய்ச்சல் மற்றும் நெஞ்சில் அசௌகரியம் போன்ற பிற அறிகுறிகளும் ஏற்படும்.
மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?
இரவுநேர இருமல் பொதுவாக கவலையளிப்பதாக இருக்காது என்றாலும், நீங்கள் பின்வரும் சூழ்நிலைகளில் மருத்துவ உதவியைப் பெற வேண்டும்:
தொடர் இருமல்: உங்கள் இரவுநேர இருமல் மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்தால் அல்லது காலப்போக்கில் மோசமாகிவிட்டால், மருத்துவரை அணுகவும்.
தொடர்புடைய அறிகுறிகள்: உங்கள் இருமல் அதிக காய்ச்சல், மார்பு வலி, மூச்சுத் திணறல் அல்லது குறிப்பிடத்தக்க எடை இழப்பு போன்ற அறிகுறிகளுடன் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.
நாள்பட்ட நோய்கள்: உங்களுக்கு ஏற்கனவே ஆஸ்துமா, COPD அல்லது GERD போன்ற உடல்நல பிரச்சினைகள் இருந்து, உங்கள் இருமல் மோசமானால் அல்லது இருமலில் ஏதேனும் மாற்றம் இருந்தால், உங்கள் சிகிச்சைத் திட்டத்தை மதிப்பாய்வு செய்ய உங்கள் மருத்துவரை அணுகவும்.
தூங்குவதில் சிரமம்: இரவு நேர இருமல் உங்கள் தூக்கத்தையும் அன்றாட வாழ்க்கையையும் கணிசமான அளவில் சீர்குலைத்தால், உங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மருத்துவ உதவியைப் பெறுவது அவசியம்.
அதிகமாக பாதிக்கப்படக்கூடிய நபர்கள்: நீங்கள் 60 வயதுக்கு மேற்பட்டவராக, புகைப்பிடிப்பவராக அல்லது இதய நோய் உள்ளவராக இருந்தால், நீங்கள் குறிப்பாக இரவு நேர இருமல் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் மற்றும் உடனடியாக மருத்துவ உதவியைப் பெற வேண்டும்.
பொறுப்புத் துறப்பு:
உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.