முன்பு எப்போதோ ஏற்பட்ட காயம், கீல்வாதம், சுளுக்கு அல்லது வேறு ஏதேனும் காரணங்களால் முழங்கால் வலி ஏற்படலாம். முழங்கால் வலி மிகவும் கடுமையானதாக இருந்தால், தினசரி நடவடிக்கைகளை மேற்கொள்வது சிரமமாகிவிடும். மருத்துவரைச் சந்திப்பதற்கு முன், இந்த வலியைக் குறைக்க சில வீட்டு வைத்தியங்கள் உதவுகின்றன.

Knee Pain Home Remedies

பெரும்பாலான முழங்கால் வலிகள் உடல் உழைப்பின்மை, வைட்டமின் டி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் பற்றாக்குறையாலும், வயதாகும்போது தசைகளிலும் திசுக்களிலும் உண்டாகும் தேய்மானத்தினாலும் ஏற்படுகின்றன. இரண்டு நாட்களாகியும் இந்த வலி குணமாகவில்லை என்றால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். காயங்களால் ஏற்படும் வலி, வீக்கம், விறைப்பு போன்றவற்றைக் குறைக்கும் சில வீட்டு வைத்தியங்களை இங்கே வழங்குகிறோம்.

முழங்கால் வலியைப் போக்க அருமையான வீட்டு வைத்தியங்கள்:

போதுமான ஓய்வு:

  • காயமடைந்த அல்லது வலியுள்ள பகுதியைப் பாதுகாத்திடுங்கள்;
  • ஒரு செயல்பாடு வலியை ஏற்படுத்துகிறது என்றால் அந்தச் செயல்பாட்டை நிறுத்துங்கள் அல்லது மாற்றுங்கள்;
  • ஓய்வெடுங்கள், முடிந்தால் வலியுள்ள முழங்காலைப் பயன்படுத்தாமல் இருங்கள்;
  • காயம்பட்ட முழங்காலுக்கு அடியில் ஒரு சிறிய தலையணையை வைத்துக் கொள்ளுங்கள்.

ஐஸ் பேக்குகள்:

  • வலி இருக்கும் பகுதியில் தினமும் 2 அல்லது 3 முறை ஐஸ் பேக்குகளை வைத்தால் வீக்கமும் வலியும் குறையும்;
  • மதுவைத் தவிர்த்திடுங்கள்;
  • முழங்காலில் காயம் ஏற்பட்டதிலிருந்து முதல் 48 மணிநேரத்திற்கு சூடான நீரில் குளிப்பது, ஹாட் பேக்குகளைப் பயன்படுத்துவது அல்லது மதுபானங்களைப் பயன்படுத்துவது ஆகியவற்றைத் தவிர்த்திடுங்கள்.

பேண்டேஜால் கட்டுதல்:

  • காயம்பட்ட முழங்காலில் எலாஸ்டிக் பேண்டேஜைப் பயன்படுத்துவது வீக்கத்தைக் குறைக்க உதவும்;
  • முழங்காலை மிகவும் இறுக்கமாகக் கட்டினால் கட்டுக்கு மேலே அல்லது கீழே உள்ள பகுதியில் வீக்கம் ஏற்படும்.
  • இறுக்கமான எலாஸ்டிக் கட்டுகள், கட்டிற்குக் கீழே உள்ள பகுதியில் உணர்வின்மை, கூச்ச உணர்வு, வலி, குளிர்ச்சியான உணர்வு அல்லது வீக்கத்தை ஏற்படுத்தும்.
  • எலாஸ்டிக் பேண்டேஜ் என்பது முழங்காலைப் பாதுகாப்பதற்கோ அல்லது அசையாமல் வைத்திருப்பதற்கோ அல்ல, வீக்கத்தைக் குறைக்க மட்டுமே இதனைப் பயன்படுத்தலாம்.

சில நேரங்களில் முன்பு எப்போதோ ஏற்பட்ட காயங்கள் மற்றும் முதிய வயது காரணமாக முழங்காலில் ஏற்படும் வலிகள் ஆகியவற்றுக்குப் பொதுவாக இந்திய சமையலறையில் கிடைக்கும் பொருட்களை வைத்தே சிகிச்சையளிக்கலாம்:

இஞ்சி

இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் முழங்கால் வலியையும் வீக்கத்தையும் குறைக்க உதவுகின்றன. இஞ்சியை வெந்நீரில் சிறிது தேன் மற்றும் எலுமிச்சை சேர்த்து காய்ச்சவும். வலி குறையும் வரை ஒரு நாளைக்கு 2-3 கப் குடிக்கவும்.

  • 1 அங்குல இஞ்சித் துண்டை அரைத்து, 1 கப் தண்ணீரில் 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
  • டிகாஷனை வடிகட்டி அதில் சிறிது தேனையும் எலுமிச்சையையும் சேர்த்து குடிக்கவும்.

மஞ்சள்

இது முடக்குவாதத்தினால் ஏற்படும் மூட்டுவலியைக் குறைக்கலாம் என்று அமெரிக்காவைச் சேர்ந்த துணை மற்றும் மாற்று மருத்துவத்திற்கான தேசிய மையம் (NCCAM) கூறுகிறது. மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற அழற்சி எதிர்ப்பு வேதிப்பொருள், ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகளையும் கொண்டுள்ளது.

  • ஒரு கப் தண்ணீரில் அரை தேக்கரண்டி இஞ்சியையும் மஞ்சளையும் சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
  • அதனை வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் சேர்த்து, ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கவும்.
  • ஒரு தேக்கரண்டி மஞ்சள் தூளை ஒரு கிளாஸ் பாலில் கொதிக்க வைத்து, தேன் சேர்த்து ஒரு நாளைக்கு ஒரு முறை குடிக்கவும்.

எச்சரிக்கை: மஞ்சள், குருதி உறைவு எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது; குருதி உறைவு எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்பவர்கள் தொடர்ந்து இதனை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எலுமிச்சை

எலுமிச்சை மூட்டு வலிக்கு நிவாரணம் அளிக்கிறது. எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் சில வகையான கீல்வாதத்தை ஏற்படுத்தும் யூரிக் அமில படிகங்களைக் கரைக்கிறது.

  • ஒன்று அல்லது இரண்டு எலுமிச்சை பழங்களை நான்கு துண்டுகளாக நறுக்கவும்.
  • துண்டுகளை ஒரு பருத்தி துணியில் கட்டி, சூடான நல்லெண்ணெயில் தோய்க்கவும்.
  • அந்தத் துணியை வலியுள்ள முழங்காலில் 5 - 10 நிமிடங்கள் வைக்கவும்.
  • முழங்கால் வலி மறையும் வரை ஒரு நாளைக்கு இரண்டு முறை இதைச் செய்யுங்கள்.

துளசி

வாத எதிர்ப்பு மற்றும் வலிப்பு குறைப்புப் (ஆன்டிஸ்பாஸ்மோடிக்) பண்புகளைத் துளசி கொண்டுள்ளது.

  • துளசி இலைகளை ஒரு கப் தண்ணீரில் போட்டு, சில நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.
  • இந்தக் கஷாயத்தை 10 நிமிடங்கள் ஆறவைத்து, வடிகட்டி குடிக்கவும்.
  • முழங்கால் வலி குறையும் வரை தினமும் குறைந்தது 3 - 4 கப் துளசி 'டீ' குடிக்கலாம்.

விளக்கெண்ணெய்

முழங்கால் வலியைக் குறைக்க விளக்கெண்ணெய் ஓர் அற்புதமான இயற்கை மருந்தாகும், மேலும் கீல்வாத அறிகுறிகளை நிர்வகிப்பதில் அதற்கு உள்ள ஆற்றல் குறித்து சுஷ்ருத சம்ஹிதா, சரக சம்ஹிதாவின் பண்டைய ஆயுர்வேத குறிப்புகளில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சமஸ்கிருதத்தில் ஆயுர்வேத சொற்களின்படி இது எரண்ட தைலம் என்று அழைக்கப்படுகிறது. மேலும், இதில் உள்ள ரிசினோலிக் அமிலம், அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட சக்திவாய்ந்த பைட்டோநியூட்ரியண்ட் ஆகும், இது எலும்புகள், தசைகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் அசௌகரியத்தையும் குறைக்கிறது.

3 தேக்கரண்டி விளக்கெண்ணெயை சூடாக்கி, சுத்தமான கிண்ணத்தில் ஊற்றவும். உள்ளங்கையில் சிறிது எண்ணெயை எடுத்து, இரு முழங்கால்களிலும் மென்மையாக வட்ட இயக்கத்தில் சிறிது அழுத்தம் கொடுத்து தலா 2 நிமிடங்கள் தடவவும், இந்த விளக்கெண்ணெய் மசாஜ் முழங்கால்களில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் வெப்பத்தை உருவாக்குகிறது, இது மூட்டுகளின் இயக்கத்தின் வரம்பை அதிகரிக்கவும் முழங்கால் வலியைக் குறைக்கவும் உதவுகிறது.

யோகாசனங்கள்

உடலைத் தூண்டி, மனதை அமைதிப்படுத்தும் உடற்பயிற்சியின் ஒரு முழுமையான வடிவம் யோகாசனமாகும். முழங்கால் வலியைக் குறைக்க யோகா மிகவும் பயனுள்ளதாக இருக்கும். முடக்கு வாதம், ஆஸ்டியோபோரோசிஸ், கீல்வாதம் போன்றவை இருந்தால், மருத்துவர்கள் மிகவும் தீவிரமான பயிற்சிகளைத் தவிர்க்க வேண்டுமென்றும், குறைந்த மற்றும் மிதமான தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டுமென்றும் பரிந்துரைக்கின்றனர்.

திரிகோனாசனம், வீரபத்ராசனம், விருக்ஷாசனம் போன்ற யோகா பயிற்சிகள் அடிப்படையான நிற்பது, நீள்வது மற்றும் வளைப்பது ஆகிய இயக்கங்களை உள்ளடக்கியுள்ளன. தினமும் காலையில் 15 - 20 நிமிடங்கள் இதனை செய்யலாம். இந்த யோகாசனங்கள் முதுகெலும்பு, முழங்கால், தொடை, இடுப்பு மற்றும் கால் தசைகளை வலுப்படுத்துகின்றன, எலும்புகள் மற்றும் மூட்டுகளுக்கு இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கின்றன, குறிப்பிடத்தக்க வகையில் அவற்றின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கின்றன மற்றும் கீல்வாதத்தினால் ஏற்படக்கூடிய வீக்கம், வலி ​​மற்றும் அழற்சியைக் குறைக்கின்றன.

முடிவுரை:

இந்த வீட்டு வைத்தியங்கள் முன்பு எப்போதோ ஏற்பட்ட காயங்கள், அதிக உடல் உழைப்பு அல்லது ஆர்த்ரைட்டிஸ் அறிகுறிகளால் ஏற்படும் லேசான மற்றும் மிதமான முழங்கால் வலியைக் குறைப்பதற்கான எளிய வழிகளாகும். இருப்பினும், கடுமையான முழங்கால் வலியின் காரணமாக உங்களால் நடக்க முடியவில்லை என்றால், விரைவில் நீங்கள் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். முழங்காலில் வலி அதிகமானாலோ மூட்டுகளில் ஏற்பட்ட வீக்கம் குறையவில்லை என்றாலோ, மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம். உடனடியாக ஒரு மருத்துவ நிபுணரிடம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

பொறுப்புத் துறப்பு:

உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.