உணவின் சத்துகளைப் பெறுவது என்பது வெறும் தட்டில் இருக்கும் உணவினைப் பற்றியது மட்டும் அல்ல, அந்தச் சத்துகள் உடலில் எவ்வளவு அளவு உறிஞ்சி பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் குறிக்கிறது. இதையே பயோஅவெயிலபிலிட்டி என்று கூறுகிறோம். எளிமையாகச் சொன்னால், உணவில் உள்ள வைட்டமின்கள், கனிமங்கள், ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் போன்ற நல்ல சத்துகள் எவ்வளவு அளவிற்கு இரத்தத்தில் கலந்து உடலுக்கு பயன்படுகின்றன என்பதைக் குறிக்கும் சொல் இது. உணவின் தரம் மற்றும் உண்மையில் உடலுக்கு சென்று சேரும் சத்துகள் என்ற இடைவெளியை இணைக்கும் முக்கியக் கருத்து என்பதால், பயோஅவெயிலபிலிட்டி பற்றி அறிந்திருப்பது மிகவும் அவசியம். இதைப் புரிந்து கொண்டால் சத்தான உணவை மட்டும் அல்லாமல் அதிலிருந்து முழு நன்மைகளையும் பெற முடியும்.
உணவின் பயோஅவெயிலபிலிட்டி என்றால் என்ன?
உணவில் உள்ள சத்துகள் உடலால் உறிஞ்சி பயன்படுத்தப்படக்கூடிய அளவையே பயோஅவெயிலபிலிட்டி என்று கூறுகிறோம். நாம் உண்பதெல்லாம் உடலில் முழுவதுமாகச் செல்லாது. ஒரு சத்து எவ்வளவு அளவு உடலில் கலந்து செயல்படுகிறது என்பதை பல காரணிகள் தீர்மானிக்கின்றன.
- உணவின் இயல்பு,
- அதனுடன் சேர்ந்து இருக்கும் பிற சத்துக்கள்,
- சமைக்கும் முறை,
- குடல்நலம், ஜீரண சக்தி
அனைத்தும் உறிஞ்சுதலில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
உதாரணமாக, தக்காளியை மெதுவாக ஆவியில் வேகவைத்தால் லைகோபீன் அதிகரிக்கும். ஆனால், அதிகமாக வேகவைத்தால் வைட்டமின் C போன்றவை குறைந்துவிடும். அதே சமயம், பருப்புகள் மற்றும் தானியங்களில் உள்ள ஃபைட்டேட்ஸ் (Phytates) போன்றவை கனிமங்கள் உறிஞ்சுவதைத் தடுக்கும். மறுபுறம், வைட்டமின் C இரும்புச் சத்தின் உறிஞ்சுதலை அதிகரிக்கும்.
சத்துகள் உறிஞ்சுதலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் காரணிகள்
சத்துகள் நிறைந்த உணவை சாப்பிடுவது முதல் படி மட்டுமே. அதை உடல் எவ்வளவு அளவு உறிஞ்சி பயன்படுத்துகிறது என்பதே முக்கியம். பயோஅவெயிலபிலிட்டி குறைந்தால், சத்தான உணவைச் சாப்பிட்டாலும் உடலில் குறைபாடுகள் தோன்றலாம். இது குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியவர்களுக்கு மிகவும் முக்கியம். இது ஆற்றல், நோய் எதிர்ப்பு சக்தி, மனத் தெளிவு மற்றும் உடல்நலத்தை பாதிக்கக்கூடும். ஆகையால், உணவின் சத்துகள் உடலில் உறிஞ்சி செல்லும் விகிதத்தை மேம்படுத்தினால், உணவில் இருந்து அதிகபட்ச நன்மையைப் பெறலாம்.
சத்துகள் உறிஞ்சுதலை அதிகரிக்க 5 எளிய வழிகள்
உணவு உடலை உண்மையில் எவ்வளவு சத்துடன் வைத்திருக்கிறது என்பதை பயோஅவெயிலபிலிட்டி தீர்மானிக்கிறது. அதிக சத்துகளைப் பெற இந்த எளிய வழிகளைப் பின்பற்றலாம்:
1. சத்துகளை சரியான ஜோடியில் சேர்த்துக் கொள்ளுங்கள்
சிறுதானியங்கள் அல்லது கீரை போன்ற தாவர அடிப்படையிலான இரும்புச் சத்துகளை, ஆரஞ்சு, எலுமிச்சை, குடைமிளகாய் போன்ற வைட்டமின் C நிறைந்த உணவுகளுடன் சேர்த்தால் இரும்பு சத்து உறிஞ்சுதல் அதிகரிக்கும். இது சைவ உணவு உட்கொள்ளுபவர்களுக்கும், வெகன்களுக்கும் முக்கியம்.
2. ஆரோக்கியமான கொழுப்புகளைச் சேருங்கள்
ஆலிவ் எண்ணெய், பாதாம், அவகாடோ போன்ற நல்ல கொழுப்புகளை உணவில் சேர்த்தால் வைட்டமின் A, D, E, K போன்ற கொழுப்பு கரையக்கூடிய வைட்டமின்கள் எளிதில் உறிஞ்சப்படும். இது நோய் எதிர்ப்பு சக்தி, பார்வை, எலும்பு ஆரோக்கியம் ஆகியவற்றுக்கும் உதவும்.
3. சரியான சமைக்கும் முறைகளைப் பயன்படுத்துங்கள்
காய்கறிகளை மெதுவாக ஆவியில் வேகவைத்தால் நுண்ணூட்டச்சத்துக்கள் காக்கப்பட்டு, ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் அதிகரிக்கும். அதிகமாக வேகவைத்தால், வைட்டமின் C மற்றும் B குழு வைட்டமின்கள் குறைந்துவிடும்.
4. தானியங்கள் மற்றும் பருப்புகளை ஊறவையுங்கள்
தானியங்கள், பயறு வகைகள் மற்றும் விதைகளை ஊறவைத்தாலோ முளைகட்டவைத்தாலோ ஃபைட்டேட்ஸ் குறைந்து, இரும்பு, ஸிங்க், கால்சியம் போன்ற கனிமங்கள் எளிதில் உறிஞ்சப்படும்.
5. குடல் நலத்தை மேம்படுத்துங்கள்
தயிர், கெஃபிர், கிம்ச்சி, சவர்கிரவுட் போன்ற புளிக்கவைத்த உணவுகள் மற்றும் ப்ரீபயாட்டிக் நார்ச்சத்து குடலிலுள்ள நல்ல பாக்டீரியாக்களை வளர்த்து, உணவிலிருந்து சத்துகள் உறிஞ்சுதலை மேம்படுத்தும்.
பொறுப்புத் துறப்பு:
உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.