ஒரு பெற்றோராக, உங்கள் குழந்தை பள்ளிக்குச் செல்வதற்கு முன் தேவையான அனைத்தையும் உறுதி செய்வீர்கள்: புத்தகங்கள், மதிய உணவு, ஒரு நேர்த்தியான சீருடை, மற்றும் ஒரு தண்ணீர் பாட்டில். ஆனால் இங்கே ஒரு கேள்வி கேட்க வேண்டியது அவசியம்: உங்கள் குழந்தை பள்ளி நேரத்தில் உண்மையில் போதுமான தண்ணீர் குடிக்கிறதா?
குழந்தைகளுக்கு நீரிழப்பு பொதுவாக ஏற்படக்கூடியது. குறிப்பாக நீண்ட பள்ளி நாட்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட நீர் இடைவேளைகள் இருக்கும்போது. கவனிக்கப்படாமல் விட்டுவிட்டால், லேசான நீரிழப்பு கூட உங்கள் குழந்தையின் மனநிலை, கவனம், உடல் நலம் மற்றும் ஒட்டுமொத்த கல்வி செயல்திறனை பாதிக்கலாம்.
இந்த வலைப்பதிவில், குழந்தைகளில் நீரிழப்பு அறிகுறிகளை எவ்வாறு கண்டறிவது, பள்ளியில் தண்ணீர் குடிப்பது ஏன் முக்கியம், மற்றும் உங்கள் குழந்தையை மகிழ்ச்சியுடன் நீரேற்றமாக வைத்திருக்க நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.
பள்ளி குழந்தைகளுக்கு தண்ணீர் குடிப்பது ஏன் முக்கியம்?
பள்ளி நேரத்தில், குழந்தைகள் பெரும்பாலும் வகுப்புகள், விளையாட்டு மற்றும் நண்பர்கள் என்று இருப்பார்கள். எனவே, தண்ணீர் குடிக்க மறந்துவிடுவார்கள். இங்கே நீரேற்றம் ஏன் முக்கியம் என்பதற்கான காரணங்கள்:
- மூளையின் செயல்பாட்டிற்கு உதவுகிறது: லேசான நீரிழப்பு கூட கவனம் மற்றும் நினைவாற்றலை பலவீனப்படுத்தலாம்.
- உடல் ஆற்றலை அதிகரிக்கிறது: குழந்தைகள் வியர்வை மூலம் திரவங்களை இழக்கிறார்கள், குறிப்பாக இடைவேளை மற்றும் விளையாட்டுகளின் போது.
- செரிமானத்திற்கு உதவுகிறது: தண்ணீர் மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது மற்றும் வளர்சிதை மாற்றத்தை ஆதரிக்கிறது.
- உடல் வெப்பநிலையை சீராக்குகிறது: குறிப்பாக வெப்பமான மாதங்களில் இது மிகவும் முக்கியம்.
பள்ளியில் குழந்தைகளின் நீரிழப்புக்கான முதல் 7 அறிகுறிகள்
குழந்தைகளிடம் நீரிழப்பைக் கண்டறிவது எப்போதும் எளிதல்ல; அவர்களுக்குப் பசி அல்லது தாகம் ஏற்படுவதுகூட தெரியாமல் போகலாம். இந்த நுட்பமான ஆனால் முக்கியமான அறிகுறிகளைக் கவனியுங்கள்:
- உலர்ந்த உதடுகள் மற்றும் வாய்: உங்கள் குழந்தை பெரும்பாலும் உலர்ந்த உதடுகளுடன் வீட்டிற்கு வந்தால் அல்லது வாய் வறண்டுள்ளதாக கூறினால், அவர்கள் போதுமான தண்ணீர் குடிக்கவில்லை என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
- சோர்வு அல்லது எரிச்சல்: நீரிழப்பு சோர்வு மற்றும் மனநிலை மாற்றங்களை ஏற்படுத்தும். பொதுவாக மகிழ்ச்சியாக இருக்கும் உங்கள் குழந்தை பள்ளியிலிருந்து வந்த பிறகு அசாதாரணமாக சோர்வாக அல்லது எரிச்சலுடன் இருந்தால், தண்ணீரைக் குறைவாகக் குடிப்பது காரணமாக இருக்கலாம்.
- தலைவலி: நீரிழப்பு இரத்த ஓட்டம் மற்றும் மூளை செயல்பாட்டை பாதிக்கிறது. அடிக்கடி தலைவலி ஏற்படும், குறிப்பாக பிற்பகலில் தலைவலி ஏற்பட்டால் போதுமான நீரேற்றம் இல்லாததுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
- தலைச்சுற்றல் அல்லது இலேசான தலைசுற்றல்: உங்கள் குழந்தை பள்ளியில் தலைச்சுற்றல் இருப்பதாக அல்லது பலவீனமாக உணர்வதாகக் குறிப்பிட்டால், அதற்கு நீரிழப்பால் ஏற்படும் எலக்ட்ரோலைட் சமநிலையின்மை காரணமாக இருக்கலாம்.
- அடர் நிற சிறுநீர்: மங்கலான மஞ்சள் சிறுநீர் ஆரோக்கியமான நீரேற்றத்தைக் குறிக்கிறது, அதேசமயம் அடர் நிறங்கள் அதிக திரவங்கள் தேவை என்பதைக் காட்டுகின்றன.
- குறைந்த சிறுநீர் கழித்தல் அல்லது கழிப்பறைக்கு செல்வது குறைதல்: பள்ளி நேரத்தில் அவர்கள் கழிப்பறையை அதிகம் பயன்படுத்தவில்லை என்றால், அவர்கள் போதுமான தண்ணீர் உட்கொள்ளாமல் இருக்கலாம்.
- கவனம் குறைதல்: உங்கள் குழந்தை கவனம் செலுத்த சிரமப்படுகிறதா அல்லது படிப்பில் பின்தங்கி இருக்கிறதா? நீரேற்றம் அறிவாற்றல் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.
குழந்தைகள் பள்ளியில் தண்ணீர் குடிக்காததற்கான பொதுவான காரணங்கள்
போதுமான நீரேற்றம் இல்லாததற்கான காரணத்தைப் புரிந்துகொள்வது பெற்றோர்களுக்கு இந்தச் சிக்கலை சிறப்பாக சமாளிக்க உதவும்:
- அவர்கள் மிகவும் பிஸியாக அல்லது கவனச்சிதறலுடன் இருப்பதால் நினைவில் கொள்வதில்லை.
- வகுப்பின்போது கழிப்பறையைப் பயன்படுத்த அனுமதி கேட்க விரும்பவில்லை.
- அவர்களுக்கு தண்ணீரின் சுவை பிடிக்கவில்லை அல்லது சர்க்கரை பானங்களை விரும்புகிறார்கள்.
- அவர்களின் தண்ணீர் பாட்டில் மிகச் சிறியதாகவோ அல்லது எளிதில் அணுக முடியாததாகவோ உள்ளது.
- சக நண்பர்களின் தாக்கம், மற்ற குழந்தைகளும் தண்ணீர் குடிப்பதில்லை.
வயதுவாரியாக குழந்தைகளின் தினசரி நீர் தேவை
வயது, செயல்பாட்டு நிலை மற்றும் காலநிலை ஆகியவற்றைப் பொறுத்து அளவு மாறுபடும், ஆனால் பொதுவான வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கின்றன:
வயதுக் குழு | பரிந்துரைக்கப்பட்ட தினசரி நீர் உட்கொள்ளல் |
4–8 ஆண்டுகள் | ~5 கப் (1.2 லிட்டர்) |
9–13 ஆண்டுகள் (பெண்கள்) | ~7 கப் (1.6 லிட்டர்) |
9–13 ஆண்டுகள் (பையன்கள்) | ~8 கப் (1.9 லிட்டர்) |
குறிப்பு: இது பானங்கள் மற்றும் உணவு போன்ற அனைத்து மூலங்களிலிருந்தும் கிடைக்கும் தண்ணீரையும் உள்ளடக்கியது, ஆனால் வெறும் தண்ணீரே நீரேற்றத்தின் முக்கிய ஆதாரமாக இருக்க வேண்டும்.
உங்கள் குழந்தை பள்ளியில் அதிக தண்ணீர் குடிக்க ஊக்குவிக்க எளிதான குறிப்புகள்
உங்கள் குழந்தைக்கு நீரேற்றத்தை எளிதாகவும் கவர்ச்சியாகவும் மாற்றுவது எப்படி:
- வேடிக்கையான, மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டிலை பேக் செய்யுங்கள்: உங்கள் குழந்தை தங்கள் விருப்பமான நிறம் அல்லது கார்ட்டூன் தீம் கொண்ட பாட்டிலைத் தேர்வு செய்ய அனுமதிக்கவும். அது கசியாத, BPA இல்லாத மற்றும் எளிதாகத் திறக்கக்கூடியதாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- நீர் இடைவேளை நினைவூட்டல்களை அமைக்கவும்: இடைவேளை, மதிய உணவு மற்றும் அவர்கள் தங்கள் மேசைக்குத் திரும்பும் ஒவ்வொரு முறையும் தண்ணீர் குடிக்க உங்கள் குழந்தைக்கு கற்றுக் கொடுங்கள்.
- நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை மதிய உணவுப் பெட்டிகளில் சேர்க்கவும்: வெள்ளரிகள், ஆரஞ்சு, தர்பூசணி, திராட்சை மற்றும் ஸ்ட்ராபெர்ரிகள் நீரேற்றத்தின் சிறந்த ஆதாரங்கள்.
- நீரில் இயற்கை சுவைகளைச் சேருங்கள்: பாட்டிலில் எலுமிச்சை துண்டுகள், புதினா, வெள்ளரி அல்லது பெர்ரிகளைச் சேர்த்து தண்ணீரை சுவைமிக்கதாக மாற்றவும்.
- பாராட்டி ஊக்குவிக்கவும்: 'தண்ணீரை குடித்து முடித்ததற்கு வாழ்த்துகள்!' என்று பாராட்டுவது ஆரோக்கியமான பழக்கங்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கும்.
விளையாட்டு நாட்கள் அல்லது கோடைகாலங்களில் குழந்தைகளுக்கு கூடுதல் நீர் குறிப்புகள்
வெப்பமான நாட்களில் அல்லது உடல்சார்ந்தசெயல்பாடுகளில் ஈடுபடும்போது குழந்தைகளுக்கு இன்னும் அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. எப்போதும் கூடுதல் திரவங்களை பேக் செய்து, உடற்பயிற்சிக்கு முன், உடற்பயிற்சியின் போது மற்றும் உடற்பயிற்சிக்குப் பின் குடிக்க நினைவூட்டுங்கள்.
முடிவுரை
குழந்தைகள் நன்கு நீரேற்றமாக இருக்கும்போது, அவர்கள் நன்றாக உணர்கிறார்கள், தெளிவாக சிந்திக்கிறார்கள் மற்றும் பள்ளியில் சிறப்பாக செயல்படுகிறார்கள். அவர்களின் நீர் உட்கொள்ளலைக் கவனிப்பது அவர்களின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியை ஆதரிப்பதற்கான எளிமையான ஆனால் சக்திவாய்ந்த வழிகளில் ஒன்றாகும்.
உங்கள் குழந்தையின் கவனம் மற்றும் ஆற்றலுக்கு சரியான நீரேற்றம் அவசியம். நீரிழப்புக்கான இந்த அறிகுறிகளைக் கவனத்தில் கொள்ளுங்கள் மற்றும் உங்கள் குழந்தை பள்ளியில் ஆரோக்கியமான பழக்கத்தை உருவாக்க உதவுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
என் குழந்தை பள்ளியில் போதுமான தண்ணீர் குடிக்கிறதா என்று எப்படி தெரிந்து கொள்வது?
அடிக்கடி சிறுநீர் கழித்தல், வெளிர் நிற சிறுநீர், நல்ல ஆற்றல், மற்றும் உதடுகள் உலர்ந்து போகாமல் இருத்தல் அல்லது தலைவலி இல்லாதது போன்ற அறிகுறிகள் உள்ளனவா என்று பார்க்கவும்.
குழந்தைகள் அதிக தண்ணீர் குடிக்க முடியுமா?
இது அரிது, ஆனால் ஆம். அதிகப்படியாக மடமடவென குடிப்பதற்குப் பதிலாக, தொடர்ந்து, மிதமான அளவுகளில் குடிக்க ஊக்குவிக்கவும்.
என் குழந்தைக்கு வெறும் தண்ணீர் பிடிக்கவில்லை என்றால், எந்த பானங்கள் நல்ல மாற்றுகளாக இருக்கும்?
சுவை சேர்த்த தண்ணீர், இனிப்பற்ற தேங்காய் தண்ணீர் அல்லது நீர்த்த பழச்சாறுகள் சர்க்கரை சேர்க்கப்பட்ட சோடாக்கள் அல்லது விளையாட்டு பானங்களைத் தவிர்க்க உதவும்.
பொறுப்புத் துறப்பு:
உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.