சமைப்பதற்கும், ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கத்திற்கும் சமையல் எண்ணெய் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. சமையல் எண்ணெய்கள் உணவுகளுக்கு சுவையையும் மணத்தையும் சேர்ப்பதுடன், உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பல வகையான எண்ணெய்கள் இருந்தாலும், மரச்செக்கு எண்ணெய் (Cold-pressed oil) மற்றும் சாதாரண (சுத்திகரிக்கப்பட்ட) எண்ணெய் (Regular/Refined oil) ஆகியவை மிகவும் பிரபலமான இரண்டு வகைகளாகும். சமையலுக்கு எது சரியானது, ஆரோக்கியத்திற்கு எது நல்லது என்ற விவாதம் எப்போதும் நிலவுகிறது. இரண்டுமே சமைப்பதற்குப் பயன்படுத்தப்பட்டாலும்; அவற்றின் பதப்படுத்துதல், ஊட்டச்சத்து மதிப்பு, இரசாயன மற்றும் இயற்பியல் பண்புகள் ஆகியவை அவற்றை தனித்துவமாக்குகின்றன. இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாடு, எது ஆரோக்கியமானது மற்றும் சரியான வகை எண்ணெயைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்பதைப் பற்றி மேலும் அறிய இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.
மரச்செக்கு எண்ணெய் என்றால் என்ன?
மரச்செக்கு எண்ணெய் என்பது வெப்பம் அல்லது கடுமையான இரசாயனங்களைப் பயன்படுத்தாமல் விதைகளையோ அல்லது கொட்டைகளையோ பிழிந்து எண்ணெய் எடுக்கும் ஒரு முறையாகும். பெரிய அளவில் உற்பத்தி செய்ய, இயந்திர அழுத்திகள் பயன்படுத்தப்பட்டு, வெப்பநிலை 49°C அல்லது 120°F க்குக் கீழே பராமரிக்கப்படுகிறது. இந்த செயல்முறை, எண்ணெய்கள் அவற்றின் இயற்கையான சுவை, மணம், நிறம், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்களைத் தக்கவைத்துக்கொள்ள உதவுகிறது.
மரச்செக்கு எண்ணெய் வகைகள்:
- மரச்செக்கு தேங்காய் எண்ணெய்
- மரச்செக்கு நல்லெண்ணெய்
- மரச்செக்கு ஆலிவ் எண்ணெய்
- மரச்செக்கு கடுகு எண்ணெய்
- மரச்செக்கு கடலை எண்ணெய்
சாதாரண (சுத்திகரிக்கப்பட்ட) எண்ணெய் என்றால் என்ன?
சாதாரண எண்ணெய் சுத்திகரிக்கப்பட்ட அல்லது பதப்படுத்தப்பட்ட எண்ணெய் என்று அழைக்கப்படுகிறது. இது எண்ணெயைப் பிரித்தெடுக்க மற்றும் சுத்திகரிக்க வெப்பம், இரசாயன சிகிச்சை மற்றும் துர்நாற்றம் நீக்கும் செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. இது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுவைகளை இழக்க வழிவகுத்தாலும், இந்த செயல்முறை எண்ணெய் கெட்டுவிடாமல் பார்த்துக் கொள்கிறது. எண்ணெய் பிரித்தெடுக்கும் செயல்முறை பின்வருமாறு:
- கரைப்பான் பிரித்தெடுத்தல் (பெரும்பாலும் ஹெக்சேன் பயன்படுத்தி)
- டீகம்மிங் (பசை நீக்குதல்), நடுநிலையாக்குதல், வெளுத்தல் மற்றும் துர்நாற்றம் நீக்குதல்
இந்தப் பிரித்தெடுக்கும் படிகள் அசுத்தங்களை அகற்ற உதவுகின்றன, ஆனால் அவை அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் சுவை தரும் கூறுகளையும் அகற்றுகின்றன.
சாதாரண எண்ணெய்களின் எடுத்துக்காட்டுகள்:
- சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய்
- சுத்திகரிக்கப்பட்ட சோயாபீன் எண்ணெய்
- கனோலா எண்ணெய்
- பல்வேறு காய்கறி எண்ணெய் கலவைகள்
செக்கு எண்ணெய் மற்றும் சாதாரண எண்ணெய்க்கு இடையே உள்ள முக்கிய வேறுபாடுகள்
அம்சம் | செக்கு எண்ணெய் | சாதாரண (சுத்திகரிக்கப்பட்ட) எண்ணெய் |
பதப்படுத்துதல் | இயந்திர அழுத்தம், குறைந்த வெப்பம் | இரசாயன முறையில் பிரித்தெடுத்தல், அதிக வெப்பம் |
ஊட்டச்சத்து தக்கவைப்பு | அதிகம் (வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள், என்சைம்கள்) | குறைவு (வெப்பம் மற்றும் இரசாயன இழப்பு காரணமாக) |
கெட்டுவிடாமல் இருப்பது | குறைவு | அதிகம் (சேர்க்கைகள் காரணமாக) |
சுவை & மணம் | செழுமையான, இயற்கையான | நடுநிலை அல்லது மாற்றப்பட்டது |
புகை புள்ளி | குறைவு | அதிகம் (பொரிப்பதற்கு ஏற்றது) |
விலை | அதிகம் | குறைவு |
மரச்செக்கு எண்ணெயின் ஆரோக்கிய நன்மைகள்
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது
மரச்செக்கு எண்ணெய் அத்தியாவசிய வைட்டமின் E மற்றும் பாலிஃபீனால்களைத் தக்கவைத்துக்கொள்கிறது, இவை இரண்டும் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்களாகும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இதயத்திற்கு ஆரோக்கியமான கொழுப்புகள்
ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய் போன்ற செக்கு எண்ணெய்கள் மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகளின் (MUFA & PUFA) அபரிமிதமான அளவுகளைக் கொண்டுள்ளன. இந்த ஆரோக்கியமான கொழுப்புகள் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கின்றன மற்றும் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
அழற்சி எதிர்ப்பு விளைவுகள்
மரச்செக்கு எண்ணெய்கள் வீக்கத்தைக் குறைப்பதற்கும், வளர்சிதை மாற்றச் செயல்பாட்டையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன.
சருமம்/ கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
மரச்செக்கு எண்ணெய் வைட்டமின் E மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது, இவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. இந்த எண்ணெய்கள் ஈரப்பதமளிக்கும் மற்றும் ஊட்டமளிக்கும் விளைவுகளைக் கொண்டுள்ளன, ஆரோக்கியமான சருமம் மற்றும் பளபளப்பான கூந்தலைப் பெற உதவுகின்றன. தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் போன்ற சில மரச்செக்கு எண்ணெய்கள் சரும பராமரிப்பு மற்றும் கூந்தல் பராமரிப்பு நடைமுறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
மரச்செக்கு எண்ணெய் ஆரோக்கியமானதா?
செக்கு எண்ணெய் அதன் அடர்த்தியான ஊட்டச்சத்து, தூய்மை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கிய நன்மைகள் காரணமாக சமையலுக்கு ஒரு ஆரோக்கியமான தேர்வாகக் கருதப்படுகிறது. இருப்பினும், சில சந்தர்ப்பங்களில் சாதாரண எண்ணெயைப் பயன்படுத்துவது நன்மை பயக்கும் மற்றும் நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கலாம்:
- பொரித்தல் போன்ற அதிக வெப்ப சமையலுக்கு, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் சிறந்தவை, ஏனெனில் அவை அதிக புகை புள்ளிகளைக் கொண்டுள்ளன, மேலும் தீங்கு விளைவிக்கும் புகை மற்றும் சிதைவு அபாயத்தைக் குறைக்கின்றன.
- சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் செலவு குறைந்தவை மற்றும் சந்தைகளில் எளிதாகக் கிடைக்கின்றன.
சரியான வகை எண்ணெயைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
- ஆலிவ் எண்ணெய், நல்லெண்ணெய் அல்லது ஆளிவிதை எண்ணெய் போன்ற மரச்செக்கு எண்ணெய்கள் சாலடுகள் மற்றும் டிப்கள் போன்ற குறைந்த வெப்ப சமையலுக்கு சிறந்தவை, அவை அதிகபட்ச ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் சுவையைத் தக்கவைக்கின்றன.
- கடலை எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் பாரம்பரிய இந்திய நடுநிலை வெப்ப சமையலுக்கு ஒரு நல்ல தேர்வாகும்.
- அதே நேரத்தில், சூரியகாந்தி எண்ணெய், ரைஸ் பிரான் எண்ணெய் அல்லது கனோலா எண்ணெய் போன்ற அதிக புகை புள்ளிகளைக் கொண்ட சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் பொரித்தல் அல்லது அதிக வெப்ப சமையலுக்கு ஏற்றவை. நன்மைகளைப் பெற, மிகக் குறைந்த இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களைத் தேர்வு செய்யவும்.
மரச்செக்கு எண்ணெய்களைப் பயன்படுத்துவதற்கான குறிப்புகள்
- ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுக்க குளிர்ந்த, இருண்ட இடங்களில் வைத்திருக்கவும்.
- திறந்த சில மாதங்களுக்குள் பயன்படுத்தவும்.
- அவற்றின் ஊட்டச்சத்துக்களையும் நன்மைகளையும் தக்கவைக்க அதிகம் சூடாக்க வேண்டாம்.
எது சிறந்தது?
இயற்கையான பிரித்தெடுக்கும் செயல்முறை மற்றும் அடர்த்தியான ஊட்டச்சத்துக்கள் காரணமாக மரச்செக்கு எண்ணெய் சமையலுக்கு ஒரு ஆரோக்கியமான தேர்வாக கருதப்படுகிறது. இருப்பினும், உங்கள் தேவை, சமையல் செயல்முறை மற்றும் பட்ஜெட்டைப் பொறுத்து, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை மிதமாகப் பயன்படுத்தலாம். ஆரோக்கிய நன்மைகளை அதிகமாகப் பெற, எண்ணெய்களின் கலவையை பொருத்தமான முறையில் பயன்படுத்துவதும், அவற்றை மாற்றி மாற்றிப் பயன்படுத்துவதும் முக்கியம்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
பொரிப்பதற்கு மரச்செக்கு எண்ணெயைப் பயன்படுத்தலாமா?
இல்லை, அதன் குறைந்த புகை புள்ளி காரணமாகப் பொரிப்பதற்கு இது சிறந்த தேர்வு அல்ல. நன்றாகப் பொரிப்பதற்கு, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் சிறந்த தேர்வாகும்.
மரச்செக்கு எண்ணெய்கள் ஆர்கானிக் தானா?
கிடைக்கக்கூடிய அனைத்து செக்கு எண்ணெய்களும் ஆர்கானிக் அல்ல. நீங்கள் ஆர்கானிக் எண்ணெய்களை வாங்க விரும்பினால், "ஆர்கானிக் செக்கு எண்ணெய்" என்ற லேபிள் உள்ளதா என்று பார்க்கவும்.
மரச்செக்கு எண்ணெய்கள் ஏன் விலை அதிகம்?
இரசாயனங்களைப் பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்படுவதால், இது குறைந்த மகசூலுக்கு வழிவகுக்கிறது, இதனால் உயர்தர செக்கு எண்ணெய்களின் விலை அதிகமாக உள்ளது.
பொறுப்புத் துறப்பு:
உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.