வெற்றிலை என்பது பிப்பரேசியா குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கொடி வகையாகும், இது பெரும்பாலும் இந்தியா மற்றும் ஆசியாவில் 'பான்' ஆக 'பாக்கு' அல்லது புகையிலையுடன் உட்கொள்ளப்படுகிறது.
பலர் பலமான விருந்துக்குப் பிறகு வெற்றிலை போடுவர், சிலர் அடிக்கடி வெற்றிலைப் போடுவதை ஒரு பழக்கமாகவே வைத்திருப்பர். இந்தியாவில் மத சடங்குகளின் போது வெற்றிலை குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்கிறது.
இந்தியாவில், திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளின் போது, கடவுளுக்கு வெற்றிலைப் படைக்கப்படுகிறது மற்றும் மரியாதைக்கான அடையாளமாக வயதானவர்களுக்கும் வெற்றிலைக் கட்டு கொடுக்கப்படுகிறது. இந்த பளபளப்பான, இதய வடிவிலான இலைகளில் மறைந்துள்ள பெரிய அளவிலான ஆரோக்கிய நன்மைகளை நாம் பெரும்பாலும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறோம்.
இந்தியில் ‘பான் கா பதா’என்றும், தெலுங்கில் தாமலபாக்கு என்றும், தமிழில் வெத்தலபாக்கு என்றும், மலையாளத்தில் வட்லா என்றும் அழைக்கப்படும் இந்த இலைகள் உடல்நலத்திற்கு உதவக்கூடியவை. வைட்டமின் சி, தயாமின், நியாசின், ரிபோஃப்ளேவின், கரோட்டின் போன்ற வைட்டமின்கள் மற்றும் கால்சியம் ஆகியவை வெற்றிலையில் நிறைந்துள்ளதால், இதில் நோய் தீர்க்கும் ஆரோக்கிய நன்மைகள் உள்ளன.
தோஷங்கள் மீதான விளைவு:
வெற்றிலைகள் அபரிமிதமான சிகிச்சை ஆற்றலைக் கொண்டுள்ளன, இவை அனைத்தும் சரக சம்ஹிதா, சுஷ்ருத சம்ஹிதாவின் பண்டைய ஆயுர்வேத குறிப்புகளில் விவரிக்கப்பட்டுள்ளன. இவை டிக்டா மற்றும் கடு ரசத்தை அதாவது கசப்பான மற்றும் கடுமையான சுவையைக் கொண்டுள்ளன மற்றும் வலுவான உஷ்ண வீர்யா அல்லது ஆற்றலைக் கொண்டு உடலில் வெப்பத்தை உருவாக்குகின்றன. மேலும், வெற்றிலையில் க்ஷர தன்மை உள்ளது, அதாவது கார தன்மை, இது வயிறு மற்றும் குடலில் உள்ள pH சமமின்மையைத் திறம்பட நடுநிலையாக்கி, செரிமான ஆரோக்கியத்தை பெரிதும் மேம்படுத்துகிறது. அவை எளிதாக உணவில் சேர்த்துக்கொள்ளப்படலாம் அல்லது பேஸ்ட்கள், பொடிகள், சாறுகள் வடிவில் உட்கொள்ளப்படலாம், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தலாம், அவற்றில் உள்ள லகு தன்மைகளால் உடலில் இலகுவாக ஒருங்கிணைக்கப்படலாம். இவை பித்த தோஷங்களை அதிகரிக்க உதவுகின்றன, அதே நேரத்தில் வாத மற்றும் கப கூறுகளை சமநிலைப்படுத்துகின்றன, உடலில் திரிதோஷிக் இணக்கத்தை பராமரிக்கின்றன.
வெற்றிலையின் ஆரோக்கிய நன்மைகள்:
வலி நிவாரணி
வெற்றிலை ஒரு சிறந்த வலி நிவாரணி, இது வலியிலிருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. வெட்டுக்கள், சிராய்ப்புகள், சினப்புகள் காரணமாக ஏற்படும் வலியைப் போக்க இதைப் பயன்படுத்தலாம். கொழுந்து வெற்றிலையை பேஸ்ட் போல அரைத்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். வெற்றிலை சாறு உடலின் உள்ளே ஏற்படும் வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
மலச்சிக்கலைப் போக்குகிறது
வெற்றிலைகளில் உடலில் இருந்து ரேடிக்கல்களை அழிக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடலில் சாதாரண PH அளவை மீட்டெடுத்து, வயிற்றுக் கோளாறை சரிசெய்ய உதவுகிறது. மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் பெற வெற்றிலை சாப்பிடுவதை ஆயுர்வேதம் பரவலாக பரிந்துரைக்கிறது. வெற்றிலையை நசுக்கி இரவில் தண்ணீரில் போடவும். காலையில் வெறும் வயிற்றில் அந்தத் தண்ணீரைக் குடிக்கவும். இவ்வாறு செய்தால் மலச்சிக்கல் சரியாகும்.
செரிமானத்தை மேம்படுத்துகிறது
பலமான விருந்துக்குப் பிறகு ஏன் வெற்றிலையை மென்று சாப்பிட வேண்டும் என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அதன் இரைப்பைக் குடல் காற்று நீக்கி (கார்மினேடிவ்), வாயு எதிர்ப்பு மற்றும் குடலைப் பாதுகாக்க உதவும் பண்புகளுக்காக இது பரிந்துரைக்கப்படுகிறது. வெற்றிலைகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, இரத்த ஓட்டத்தைத் தூண்டுகிறது மற்றும் முக்கிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு குடலைத் தூண்டுகிறது.
சுவாச பிரச்சினைகளைக் குறைக்கிறது
இருமல் மற்றும் சளி தொடர்பான பிரச்சினைகளுக்கு வெற்றிலை பரவலாக உதவுகிறது. மார்பு, நுரையீரல் அடைப்பு மற்றும் ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்து. வெற்றிலையில் சிறிது கடுகு எண்ணெயைத் தடவி சூடாக்கி மார்பில் வைத்தால் நெஞ்சு சளி குணமாகும். நீங்கள் சிறிது இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து, இரண்டு கப் தண்ணீரில் ஏலக்காய், கிராம்பு மற்றும் இலவங்கப்பட்டை சேர்த்து, இதை 1 கப் அளவு வரும்வரை காய்ச்சவும். நெஞ்சு சளி மற்றும் சுவாசப் பிரச்சனைகளில் இருந்து சிறந்த நிவாரணம் பெற இந்தக் கலவையை ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை பருகுங்கள்.
ஆன்டிசெப்டிக் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள்
வெற்றிலையில் அற்புதமான ஆன்டிசெப்டிக் பண்புகள் உள்ளன, ஏனெனில் அவற்றில் பாலிபினால்கள் நிறைந்துள்ளன, குறிப்பாக அதில் உள்ள சாவிகோல் கிருமிகளிலிருந்து இரட்டைப் பாதுகாப்பை வழங்குகிறது. இது கீல்வாதம் மற்றும் விரையழற்சி சிகிச்சையிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
இதன் அற்புதமான பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் பூஞ்சை தொற்றுகளில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கிறது. வெற்றிலையின் பேஸ்ட்டைத் தடவினால் பாதிக்கப்பட்ட பகுதியில் பூஞ்சை தொற்று அழிக்கப்படுகிறது.
வாய் ஆரோக்கியத்தை பராமரிக்கிறது
வெற்றிலையில் ஏராளமான ஆன்டிமைக்ரோபியல் ஏஜென்டுகள் உள்ளன, அவை வாயில் துர்நாற்றத்தைத் தூண்டும், அத்துடன் துவாரங்கள், பிளேக் மற்றும் பல் சிதைவு போன்ற சிக்கல்களை ஏற்படுத்தும் பல பாக்டீரியாக்களைத் திறம்பட எதிர்த்துப் போராடுகின்றன. உணவுக்குப் பிறகு சிறிதளவு வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் குடல் ஆரோக்கியம் மேம்படுவதோடு, வாய் துர்நாற்றம், பல்வலி, ஈறு வலி, வீக்கம் மற்றும் வாய்வழி தொற்றுகள் நீங்கும்.
மூட்டு வலியைப் போக்குகிறது
வெற்றிலையில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. இது முடக்கு வாதம், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பல நாள்பட்ட பலவீனப்படுத்தும் நோய்களின் முக்கிய அறிகுறிகளான மூட்டுகளில் ஏற்படும் அசௌகரியத்தையும் வலியையும் வெகுவாகக் குறைக்கிறது. பாதிக்கப்பட்ட எலும்புகளிலும் மூட்டுகளிலும் ஏற்படும் வலியின் தீவிரத்தைக் கணிசமாகக் குறைக்கிறது, அந்தப் பகுதியில் வீக்கத்தையும் கீல்வாத அறிகுறிகளையும் குறைக்கிறது.
நீரிழிவு நோயை நிர்வகிக்கிறது
வெற்றிலைப் பொடி, புதிதாகக் கண்டறியப்பட்ட வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் திறன் கொண்டது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வெற்றிலை ஒரு வலுவான ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும், இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் கட்டுப்பாடற்ற இரத்த குளுக்கோஸ் காரணமாக ஏற்படும் அழற்சியைக் குறைக்க உதவுகிறது மற்றும் நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவுகிறது.
புற்றுநோயைத் தடுக்கிறது
வெற்றிலையை புகையிலை மற்றும் பாக்குடன் எடுத்துக் கொண்டால் வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரிக்கும். இருப்பினும், வெற்றிலையை மட்டும் சாப்பிடுவதால் நன்மைகள் ஏற்படும். ஏனெனில், வெற்றிலையில் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு, பிறழ்வு எதிர்ப்பு மற்றும் பெருக்க எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட மதிப்புமிக்க பினாலிக் கலவைகள் நிரம்பியுள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இவை தவிர, வெற்றிலையில் புற்றுநோயை எதிர்த்துப் போராடக்கூடிய பைட்டோகெமிக்கல்களும் உள்ளன.
மனச்சோர்வை எதிர்த்துப் போராடுகிறது
மத்திய நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டைத் தூண்டும் இயற்கை மருந்தாக பல ஆண்டுகளாக வெற்றிலை பயன்படுத்தப்படுகிறது. வெற்றிலையில் உள்ள நறுமண ஃபீனாலிக் கலவைகள் கேடகோலமைன்களின் வெளியீட்டைத் தூண்டுகிறது, இது உடல்நலனையும் மனநலனையும் மேம்படுத்துகிறது. எனவே வெற்றிலையை மட்டும் மென்று சாப்பிடுவது மன அழுத்தத்தைப் போக்க ஓர் எளிய வழியாகும்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
வெற்றிலையை மென்று சாப்பிடுவது நல்லதா?
வெற்றிலையை மெல்வதால் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கிறது. ஆரோக்கிய உணர்வு, அதிக விழிப்புணர்வு, வியர்வை மற்றும் உமிழ்நீர் சுரப்பும் அதிகரிக்கும். பல ஆரோக்கியத்திற்கு ஏற்ற பண்புகளையும் கொண்டுள்ளது. வெற்றிலையை மெல்லுவது முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கும்.
வெற்றிலை சாப்பிடுவதால் முடிக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?
வெற்றிலையைத் தொடர்ந்து பயன்படுத்துவது முடி வேகமாக வளர உதவுகிறது. வெற்றிலையைத் தொடர்ந்து பயன்படுத்தினால், முடி உதிர்வு பிரச்சனைகளுக்குத் தீர்வு காணலாம். மேலும், அவை முடியின் பொலிவை அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரவும் உதவுகிறது. வெற்றிலையின் சிகிச்சை பண்புகள் அரிப்பு, பொடுகு மற்றும் தலைமுடி வெடிப்புகளுக்குச் சிகிச்சையளிக்க உதவுகிறது.
சருமத்திற்கு வெற்றிலை நல்லதா?
ஆன்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்ட வெற்றிலை, சொறி, முகப்பரு, அரிப்பு மற்றும் உடல் துர்நாற்றம் போன்ற தோல் கோளாறுகளுக்கு இயற்கையான சிகிச்சை முறையாக அமைந்துள்ளது. இந்த இலைகள் சருமத்துளைகளுக்குள் மறைந்திருக்கும் அழுக்குகளை வெளியேற்றி சருமத்தை சுத்தப்படுத்தவும், ஒவ்வாமைகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது. மேலும் மென்மையான, மிருதுவான மற்றும் பளபளப்பான சருமத்தை வழங்குகிறது.
வெற்றிலையில் என்ன வைட்டமின்கள் உள்ளன?
வெற்றிலையில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் சி, நியாசின், ரிபோஃப்ளேவின் மற்றும் கரோட்டின் போன்ற வைட்டமின்கள் உள்ளன. இந்த இலைகளில் பிற தாதுக்களும் கால்சியமும் நிறைந்துள்ளன.
குறிப்புகள்:
- Piper betel (L): Recent Review of Antibacterial and Antifungal Properties, Safety Profiles, and Commercial Applications https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC8073370/
- https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC7014830/
பொறுப்புத் துறப்பு:
உங்களுக்குத் தகவல்களை அளிப்பது மட்டுமே இங்கு வழங்கப்பட்டுள்ள உள்ளடக்கத்தின் நோக்கம். இந்த வலைப்பதிவு மருத்துவ ஆலோசனை, நோய் கண்டறிதல் அல்லது சிகிச்சை ஆகியவற்றுக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் தகுதிவாய்ந்த மருத்துவரிடம் ஆலோசனைப் பெற வேண்டும். வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு குறிப்பிட்ட சோதனைகள், மருத்துவர்கள், நடைமுறைகள், கருத்துகள் அல்லது பிற தகவல்கள் ஆகியவற்றை ரிலையன்ஸ் அங்கீகரிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை.